அநுரவும், தையிட்டி விகாரையும் தம்மதீபக் கோட்பாடும்
இலங்கைத் தீவின் இனப் பிரச்சனை என்பது இன்றோ, நேற்றோ அல்ல.இலங்கை சுதந்திரம் அடைந்த காலத்தின் பின்னோ ஏற்பட்ட ஒன்றல்ல.
அது 2300 ஆம் ஆண்டு காலத்துக்கு முந்தைய விஜயன் என்ற மனிதன் இலங்கைக்கு வந்ததாக கூறப்படும் ஐதீக கதையை பௌத்த மதத்தின் வரலாறாக கி.பி 463இல் மகாநாமதேரரால் மகாவம்சம் என்ற நுால் எழுதப்பட்டது.
கி.பி 5ஆம் நூற்றாண்டில் மகாநாமதேரால் எழுதப்பட்ட இந்த““மகாவம்சம்““ என்ற நூலின் அடித்தளத்திலிருந்துதான் தமிழின எதிர்ப்பு சிங்கள பௌத்தர்களிடம் எழுந்திருக்கிறது.
தையிட்டி விகாரை
இன்று இலங்கையின் வட-கிழக்கில் கட்டப்படும் விகாரைகளின் தொடர்ச்சியில் தையிட்டியில் அமைக்கப்பட்ட விகாரையும், அதனால் ஏற்பட்டுள்ள கொதிநிலை என்பதும் சிங்கள மக்களிடம் ஆழமாக வேரூன்றியுள்ள அந்த மகாவம்சம் மனநிலையின் வெளிப்பாடுதான்.
மகாநாம தேரருக்க இலங்கை தீவை முழுமையான பௌத்த நாடாக மாற்ற வேண்டும் என்ற விருப்பு இருந்தது. அந்த விருப்பை பௌத்தத்தை பாதுகாப்பதற்கு புத்தரால் தேர்ந்தெடுக்கப்பட்ட தீவுதான் என மகாவம்சத்தில் வலியுறுத்துகிறார்.
பௌத்தத்திற்காக புத்தரால் தேர்ந்தெடுக்கப்பட்டது தீவு. அதாவது புத்தரால் ஆசீர்வதிக்கப்பட்ட பூமி என்ற விருப்பை சிங்கள பௌத்தர்களின் விருப்புவாதமாக மகாவம்சத்தின் ஊடாக மகாநாம தேரர் வெளிப்படுத்துவதில் இருந்துதான் இலங்கைத் தீவின் இனப் பிரச்சனை தோற்றம் பெற்றது என்று கூறுவதே பொருத்தமானது.
மகாவம்சம் என்கின்ற இன்று பௌத்த சிங்கள மக்களின் புனித நூலாக சித்தரிக்கப்படும் வரலாற்றுப் பதிவேட்டுக்கு முக்கியத்துவம் உண்டு. அது ஒரு தொடர்ச்சி குன்றாத வரலாற்றை சரியோ, பிழையோ, தவறோ, கற்பனைகளோ எதுவாக இருப்பினும் அது இலங்கைத் தீவின் வரலாற்றை தொடர்ச்சி குன்றாமல் எழுதி இருக்கின்றது என்ற அடிப்படையில் அதற்கு ஒரு மதிப்பும் பெருமானமும் கனதியும் உண்டுதான்.
ஆயினும் அதனுடைய உள்ளடக்கம் இலங்கை தீவை இரத்தக் கலரியாக்கும், இந்து சமுத்திர பிராந்தியத்தை யுத்தப் பிராந்தியமாக்கும், அந்நிய சக்திகளின் வேட்டைக் காட்டாக்கும், சிங்கள பௌத்த அடிப்படைவாத இன, மத குரோத அடிப்படைக் கருத்துக்களைத்தான் இந்த மகாவம்சம் முன்வைக்கிறது.
சிங்கள பௌத்த பேரினவாத சித்தாந்தத்தை ""தம்மதீப கோட்பாடு"" என சிங்கள பௌத்தர்கள் வலுவாக நம்புகின்ற இனக்குரோத மனநிலையை ஸ்தாபிதம் செய்கின்றது.
தம்மதீப கோட்பாடு
""தம்மதீப கோட்பாடு"" என்றால் என்ன. அதன் உள்ளடக்கம்தான் என்ன என்பதை நாம் முதலில் விளங்கிக் கொள்ள வேண்டும் அதனை விளங்கிக் கொண்டால் மாத்திரமே இலங்கைத் தீவின் இனப் பிரச்சனையின் அடிப்படைகளை புரிந்து கொள்ள முடியும்.
சிங்கள தேரவாத பௌத்தத்தின் புனித நூலான மகாவம்சம் இலங்கைத்தீவு சிங்கள பௌத்தர்களுக்கே உரித்தானது என்பதை நிலைநாட்டுவதற்கு பின்வரும் கற்பனையான ஐதீக கருத்துக்களை முன் வைக்கிறது.
1) இலங்கை பௌத்த மதத்தின் பொருட்டு புத்தரினால் தேர்ந்தெடுக்கப்பட்ட தீவு (அதாவது ஆசீர்வதிக்கப்பட்ட பூமி)
2) சிங்கள இனத்தின் முன்னோடியான விஜயனே இலங்கைத்தீவில் முதன் முதலில் காலுான்றிய மனிதன்.
3) விஜயனும் அவனுடைய வழித் தோன்றல்களுமே (சிங்கள மொழி பேசும் மக்கள்) பௌத்தத்தை பாதுகாப்பதற்கு என்று கௌதமபுத்தரால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்.
4) இலங்கை அரசு விஜயனுடைய சந்ததியினருக்கு மட்டுமே சொந்தமானது. (இவர்கள்தான் சிங்கள மொழி பேசும் மக்கள்) இத்தகைய கற்பனையான, பொய்யான ஐதீகக்கதைகளை அடிப்படையாக கொண்டு இனம், மதம், மொழி, நாடு, அரசு ஆகிய ஐந்தையும் ஒன்றாக இணைத்து தேரவாத பௌத்த மகாசங்கத்தனரால் உருவாக்கப்பட்டதுதான் தம்மதீப கோட்பாடு.
இந்த தம்மதீப கோட்பாட்டை நிலைநாட்டுவதற்கு கிபி 6ஆம் நூற்றாண்டில் இருந்து சிங்கள அரசுகள் தொடர்ந்து முயற்சித்து வந்திருக்கின்றன. அந்த தொடர் ஆக்கிரமிப்பு கி.பி 1450இல் சப்பமல் குமாரயா யாழ்பாணத்தின் கனகசூரிய சிங்கையாரியன் மீதான சிங்கள மன்னர்களின் இறுதிப் படையெடுப்பு வரை முயற்சிக்கப்பட்டது.
ஆயினும் இலங்கையின் வட-கிழக்கு பகுதியை தொடர்ந்தும் தமிழ் மக்கள் தமது இருப்பை தக்கவைத்து தமது நிலத்தையும், வரலாற்றையும், பண்பாட்டையும் பேணி வந்திருக்கிறார்கள். இலங்கைத் தீவுக்கு கிமு 247 தேவநம்பிய தீசன் காலத்தில் அசோகச் சக்கரவர்த்தியின் மகன் மஹிந்த தேரரினால் தேரவாத பௌத்தம் கொண்டுவரப்பட்டதாக மகாவம்சம் கூறுகிறது.
ஆனால் இலங்கையின் வடகிழக்கு பகுதியில் காணப்படுகின்ற மகாயண பௌத்தத்துக்குரிய தொல்லியல் சான்றுகள் கி.மு 4ம் நூற்றாண்டுக்கு முன்னரே இலங்கை வடபகுதியில் மகாயண பௌத்தம் நிலைபெற்றிருக்கிறது என்பதனை நிரூபிப்பதற்கான தொல்லியல் சான்றுகள் பல உள்ளன. தமிழர் தாயக நிலப்பரப்பில் காணப்படுகின்ற மகாயன பௌத்த தொல்லியல் சான்றுகளின் நவீன விஞ்ஞான ஆய்வு முடிவுகள் இதனை நிரூபித்திருக்கின்றன.
தமிழர் தாயகத்தில் காணப்படுகின்ற பௌத்த மத தொல்பொருட்களுக்கும், சிங்களதேசத்தில் காணப்படுகின்ற பௌத்த தொல்பொருட்களுக்கும் இடையில் பாரிய வேறுபாடுகள் உள்ளமையை நவீன தொல்லியல் ஆய்வுகள் மூலம் நிரூபிக்க முடியும். சிங்கள மக்கள் பின்பற்றுகின்ற தேரவாத பௌத்தத்துக்கு எதிரான மகாயண பௌத்தம் தமிழர்கள் பின்பற்றிய பிரதான மதமாக கி.மு 4 தொடக்கம் கி.பி 7ம் நுாற்றாண்டு வரை இலங்கையின் வட-கிழக்க பகுதியில் நிலை பெற்று இருந்தது.
இதற்கு கி.பி 4ஆம் நூற்றாண்டில் மகாசேன மன்னன் தந்தையான கோட்டபாயன் காலத்தில் அநுராதபுரத்தில் மகாவிகாரையில் சங்கபாலரும், அபயகிரி விகாரையில் சங்கமித்தரும் (தமிழ் பௌத்த துறவி) இருந்து இரண்டு பௌத்த பிரிவுகளையும் வளர்க்க முற்பட்டு ஏற்பட்ட முரண்பாடுகள் பற்றி மகா வம்சத்தின் 36வது 37 வது அத்தியாயங்களில் பார்க்க முடியும்.
இந்த இரண்டு பௌத்த மதப் பிரிவுக்கு இடையிலான முரண்பாட்டின் வெளிப்பாடாக மகாசேனனின் அண்ணனான ஜோட்டாதீசன் காலத்தில் சங்கமித்தர் தன்னுடைய உயிருக்கு பயந்து இலங்கையின் வட பகுதிக்கு சென்று பல்லவத் துறைக்கு அருகில் உள்ள வல்லிபுரம் மடாலயத்தில் தங்கி இருந்து மகாயன பௌத்தத்தை வளர்த்தார் என்ற செய்தி மகாவம்சத்தின்அ 36ஆவது அத்தியாயம் 123ஆவது பாடலில் உள்ளது.
மகாசேனன் ஆட்சிக்கு வந்த பின்னர் மீண்டும் அநுராதபுரத்துக்கு வந்து அபயவிகாரையில் தங்கி இருந்து மகாயண பௌத்தத்தை வளர்த்தார் என்றும் மகா வம்சத்திலேயே குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்தமுரண்பாட்டின் உச்சம் மகாசேனனின் மூன்றாவது மனைவியாகிய அனுலாதேவியுடன் சங்கபால தேரர் கூட்டுச்சேர்ந்து சங்கமித்தரை படுகொலை செய்த வரலாற்றையும் மகா வம்சத்தின் அத்தியாயம் 37ல்26,27,28வது பாடல்களில் குறிப்பிடுகிறது.
ஆகவே இலங்கை தீவில் தமிழர்கள் பின்பற்றிய மகாயண பௌத்தத்துக்கு எதிராக தேரவாத பௌத்தம் மேற்கொண்ட முதலாவது படுகொலையாக சங்கமித்தரின் படுகொலை பதிவாகியிருக்கிறது. அந்தப் படுகொலையின் தொடர்ச்சியே இன்றைய தமிழின படுகொலையின் நீழ்ச்சியாக தொடர்கிறது. இன்றும் அநுராதபுர அபயகிரி விகாரை கவனிப்பாரற்று கிடக்கம் நிலையில் இதனை புனரமைக்காமல் வட-கிழக்கில் புதிய விகாரைகளை சிங்கள அரசு அமைக்கும் காரணங்களை விரிவாக ஆராய வேண்டும்.
பௌத்த மத மறுமலர்ச்சி
இலங்கையின் வட-கிழக்கில் நிலைபெற்றிருந்த மகாயண பௌத்தம் கி.பி10ம் நூற்றாண்டில் முற்றாக அழிவடைந்து சைவ-இந்து மதம் மீண்டும் இப்பகுதியில் செல்வாக்கு செலுத்தலாயிற்று. ஆனாலும் இன்று இலங்கையின் வடக்குக் கிழக்கு பகுதியில் 250க்கும் மேற்பட்ட மகாயன பௌத்த விகாரங்கள், மடாலயங்கள் போன்றவற்றின் தொல்லியல் தளங்கள் உள்ளன. இவற்றையே இப்போது இலங்கையின் சிங்கள தேரவாத பௌத்தம் உரிமை கோர முற்படுகிறது.
அதன் வெளிப்பாடு இலங்கை சுதந்திரம் அடைவதற்கு சற்று முன்னாள் காலப்பகுதியில் இருந்து உச்சம் பெறத் தொடங்கிவிட்டது.அநகாரிக தர்மபாலா என்பவரினால் பௌத்த மத மறுமலர்ச்சி என்ற அடிப்படையில் இந்திய மற்றும் தமிழ், முஸ்லிம், கிறிஸ்த்தவ எதிர்ப்புக்களாக வெளிப்பட தொடங்கியது. அந்த அடிப்படையிலேயே அநாகரிக தர்மபால நேரடியாகவே இந்திய மற்றும் தமிழின எதிர்ப்பை நேரடியாக தென் இலங்கையின் மேடைகளில் பேசினார்.
அவருக்கு அடுத்தபடியாக 1953இல் டி.சி விஜயவர்த்தன Revolt in the Temple (விகாரையில் புரட்சி) என்ற 700 பக்கங்கயைக் கொண்ட விரிவான நூலை வெளியிட்டார். இந்த நூல்தான் அன்றைய காலத்தில் சிங்கள பௌத்த பேரனவாதத்திற்கு வேதாகமம் போன்றதாக நிலை பெற்றது. அதுவே இலங்கையின் சிங்கள மொழிச் சட்டத்திற்கும் பௌத்தமத முன்னுரிமைக்கும் அரசியல் சாசனத்தின் ஊடாக வலுப்படுத்த வேண்டும் என்ற நிர்பந்தத்தை சிங்கள அரசியல்வாதிகளுக்கு ஊட்டியது.
இதனையடுத்து இலங்கை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த சிறில் மத்தியூ எழுதிய “Sinhalese! Rise to Protect Buddhism” என்ற நூல் மிகவும் கவனிக்கத்தக்கது. சிறில் மத்தியூ இலங்கை அரசியலில் சிங்கள தேசியவாதத்தின் கடும்போக்காளராக சிங்கள மக்கள் மத்தியில் புகழ்பெற்றவர். அவர் எழுதிய “சிங்கள மக்கள்! பௌத்த மதத்தை பாதுகாக்க எழுங்கள்” (Sinhalese! Rise to Protect Buddhism) என்ற நூல், சிங்கள மக்களின் மொழியையும் பௌத்த மதத்தையும் பாதுகாக்கும் நோக்குடன் எழுதப்பட்டது.
அந்த நூல் தம்மதிபோட்பாட்டை முற்றிலும் வலியுறுத்துவதாகவும் அதனை நடைமுறைப்படுத்வும் தமிழர்களை இலங்கைத் தீவிலிருந்து இல்லாது ஒழிக்கும் பேரினவாத சிந்தனையோடு எழுதப்பட்டது. இந்த நூலில் தமிழர் தாயகத்தின் 241 இடங்கள் தேரவாத பௌத்த மதத்திற்கு உரித்தானது என்றும், அந்த இடங்களை கைப்பற்றி அங்கே பௌத்த விகாரைகள் கட்டப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அவர் 1979 ஆம் ஆண்டில் நிகழ்த்திய தீவிரமான இனவாத உரைகளின் தொகுப்பாக இந்த நூல் சிங்கள மக்களுக்குள் தமிழ் சமூகத்தினருக்கு எதிரான 1981 யாழ் நூலக எரிப்பு 1983 ஆம் ஆண்டின் “கறுப்பு ஜூலை” (Black July) என்ற தமிழின அழிப்புக்கு தூண்டுதலாக அமைந்தது.
இதன் தொடர் வெளிப்பாடுதான் கடந்த காலத்தில் வடகிழக்கில் ஆயிரம் விகாரைகளை அமைப்பது என்ற கோஷத்தை தேர்தல் விஞ்ஞாபனமாக சஜித் பிரேமதாசா முன்வைத்தார் என்பதையும், 2019 வரவு செலவுத் திட்டத்தில் வடகிழக்கில் ஆயிரம் விகாரங்களை அமைக்க நிதிய ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டமையும், நோக்க வேண்டும். இலங்கையின் பௌத்த மகா சங்கங்கள் தம்மதீபக் கோட்பாட்டை தொடர்ந்து இலங்கையில் நிலைநாட்டுவதற்கு முற்படுகின்றது.
குருந்தூர் மலை
நிலத்தையும் அதிகாரத்தையும் இலங்கைத்தீவின் பூர்வீக்க்குடிகளான தமிழ் மக்களுடன் பங்குபோட பௌத்த சிங்கள தேசமும், சிங்கள அரசும், பௌத்த மகா சங்கமம், சிங்கள அறிவுஜீவிகளும், சிங்கள அரசியல்வாதிகளும் ஒருபோதும் தயார் இல்லை என்பது இந்த தம்மதீபக் கோட்பாட்டின் உள்ளடக்கமான மெய்யியலில் இருந்துதான் தோற்றம் பெற்றுள்ளது.
இதற்கு டி .எஸ். சேன நாயக்க முதல் இன்றைய அநுர குமார திசாநாயக்க வரை யாரும் விதிவிலக்கல்ல. யாவரும் இந்த தம்மதீப கோட்பாட்டிற்கு கட்டுப்பட்டவர்களே. இந்த அடிப்படையில்தான் திருகோணமலை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் தொல்லியல் திணைக்களத்தின் பெயரால் பௌத்த மகாசங்கத்தினரால் அபகரிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று முல்லைத்தீவு குருந்தூர் மலையும், நெடுங்கேணி வெடுக்குநாறி மலையும் தொல்லியல் திணைக்களம் என்ற பெயரால் பௌத்த மகா சங்கத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று இன்று யாழ்ப்பாணத்தில் கொழுந்து விட்டெறியும் தையிட்டி விகாரை தமிழின அழிப்பின் ஒரு பகுதியாகவே நோக்கப்பட வேண்டும்.
இந்தப் பின்னணியில் கையிட்டி விகாரை தொடர்பான சிங்களத்தின் முன்னுக்குப் பின் முரணான கருத்துக்களும் அநுரவின் மௌனமும் பற்றி அடுத்த தொடரில் பார்ப்போம்.
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் T.Thibaharan அவரால் எழுதப்பட்டு, 19 February, 2025 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

உக்ரைன் ஜனாதிபதி மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு மோசமாக விமர்சித்துள்ள எலான் மஸ்க் News Lankasri

மாஸ் வரவேற்பு பெற்றுள்ள டிராகன் படத்திற்காக பிரதீப் வாங்கிய சம்பளம்... எத்தனை கோடி தெரியுமா? Cineulagam
