அரசியல்வாதிகளுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள அறிவுறுத்தல்
குற்றங்களை ஒடுக்குவதன் மூலம் மட்டுமே வளமான நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது என்றும், மக்களின் பொருளாதார நலனை வலுப்படுத்துவதும் அவசியம் என்றும் வலியுறுத்தும் புத்த பெருமானின் போதனைகள், பௌத்தம் எவ்வளவு நடைமுறைக்கு ஏற்ற தத்துவம் என்பதைக் காட்டுவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று (28) ஆரம்பமான உலக பௌத்த சங்க சபையின் 60ஆவது ஆண்டு நிறைவு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
ஆட்சியாளர்களின் நடத்தையே எந்தவொரு நாட்டின் ஸ்திரத்தன்மை அல்லது ஸ்திரமின்மையைத் தீர்மானிக்கிறது என்றும், ஆட்சியாளர் நேர்மையாகவும் கொள்கைப்பிடிப்புடனும் இருந்தால் நாடு வளர்ச்சியை நோக்கி நகரும் என்றும், ஊழல் நிறைந்தவராகவோ நேர்மையற்றவராகவோ இருந்தால் நாடு அராஜக நிலைக்குச் செல்லும் என்றும் புத்த போதனைகளை மேற்கோள்காட்டி ஜனாதிபதி மேலும் கூறினார்.
ஊழலற்ற தலைமை
இது எல்லா ஆட்சி முறைகளுக்கும் பொருந்தும் என்றும், இதனாலேயே பௌத்தம் எல்லா காலத்திற்கும் பொருத்தமான நடைமுறைத் தத்துவமாக விளங்குகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

களனி நாகானந்த சர்வதேச பல்கலைக்கழக கேட்போர்ட்டில் நடைபெறும் இந்நிகழ்வில், 50 நாடுகளைச் சேர்ந்த பௌத்த பிக்குகள் மற்றும் பிரதிநிதிகளுடன் உள்நாட்டு, வெளிநாட்டு விருந்தினர்கள் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
1966இல் இலங்கையில் ஆரம்பிக்கப்பட்ட உலக பௌத்த சங்க சபை, உலக அமைதிக்காகச் செயற்பட்டு வருகின்றது.
இதன் 60ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நாகானந்த பௌத்த ஆய்வு நிறுவகமும் அங்கு திறந்து வைக்கப்பட்டதுடன், ஜனாதிபதி தலைமையில் ஆண்டு நிறைவு நிகழ்வுகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டன.
மும்நிகாய மகாநாயக்க மற்றும் அனுநாயக்க தேரர்கள் உள்ளிட்ட மகா சங்கத்தினரும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
உலக பௌத்த சங்க சபையின் 11ஆவது பொதுச்சபையின் இரண்டாவது நிறைவேற்றுக் குழுக் கூட்டம் உள்ளிட்ட சமய நிகழ்வுகள் நாளை முதல் டிசம்பர் 2ஆம் திகதி வரை இலங்கையில் நடைபெறவுள்ளன.