அரச ஊழியர்களுள் ஒரு சாராருக்கு அநுர இழைத்த அநீதி
அரச ஊழியர்களுக்கான கொடுப்பனவுகளை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது, எனினும், அதிபர் ஆசிரியர்களுக்கான கொடுப்பனவுகள் எவையும் இந்த வரவு செலவுத் திட்டத்தில் அதிகரிக்கப்படவில்லை என இலங்கை ஆசியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இன்று(13.11.2026) காலை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
நேற்று(12.11.2026) ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில், கல்வித் துறையுடன் தொடர்புடைய எதிர்பார்ப்புக்கள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. கல்வித் துறையை பொறுத்தவரைக்கும் இது ஏமாற்றமளிக்கும் வரவு செலவுத் திட்டமாகவே அமைந்துள்ளது.
சலுகைகள் ஏதுமில்லை
இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு ஆசிரியர்களின் போராட்டம் ஒரு முக்கிய காரணமாக அமைந்தது. ஆனால், ஆசிரியர் சம்பள முரண்பாட்டில் எஞ்சியுள்ள மூன்றில் இரண்டு பங்கையும் வழங்குவதாக வாக்குறுதி அளித்திருந்த அரசாங்கம், இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் அது தொடர்பாக ஒரு வார்த்தையைக் கூட குறிப்பிடவில்லை.

தற்போது கல்வி முறைமையில் பெற்றோருக்கு பாரிய நிதிச்சுமை ஏற்பட்டுள்ளது. பாடசாலைகளில் தேவையான அனைத்து விடயங்களுக்கும் பெற்றோரிடம் இருந்து பணம் சேகரிக்கும் நிலை உருவாகியுள்ளது. எனவே கல்வி முறைமைக்குத் தேவையான நிதி ஒதுக்கீடுகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும். ஆனால், அதற்கான நடவடிக்கைகள் எதுவும் இந்த வரவு செலவுத் திட்டத்தில் இடம்பெறவில்லை.
அதேவேளை, அரச ஊழியர்களுக்கான கொடுப்பனவுகளை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆசிரியர் சேவையில் வழங்கப்படும் பிரதான கொடுப்பனவு கஷ்டப் பிரதேச கொடுப்பனவாகும்.

எனவே, கஷ்டப் பிரதேசக் கொடுப்பனவை 15 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்க வேண்டும் என நாம் கோரியிருந்தோம். ஆனால், அது தொடர்பாகவும் எந்தவொரு அறிவிப்பும் இடம்பெறவில்லை.
அதிபர்களுக்கு இந்த வரவு செலவுத் திட்டத்தில் மிகப்பெரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளது. அதிபர் சேவை ஒரு நிர்வாக சேவையாக மாற்றப்பட்டுள்ளதாக நாம் அறிவோம். ஆனால், நிர்வாக சேவையாக மாற்றப்பட்டிருந்தாலும், அதற்குரிய எந்தவொரு சலுகையும் அதிபர்களுக்கு வழங்கப்படவில்லை.
அரசாங்கம் இம்முறை கொடுப்பனவுகளை அதிகரிப்பதாகக் கூறியருந்த போதிலும், அதிபர்களுக்கான எந்தவொரு கொடுப்பனவையும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கவில்லை. இது அதிபர்களின் எதிர்பார்ப்புக்களை முற்றிலும் ஏமாற்றமடையச் செய்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.