மதுபானங்களில் விஷ இரசாயனம்:முன்னாள் அமைச்சரின் மதுபான தொழிற்சாலைகளுக்கு சீல்
முன்னாள் அமைச்சர் ஒருவருக்கு சொந்தமான இரண்டு மதுபான தயாரிப்பு தொழிற்சாலைகள் தொடர்பாக மதுவரி திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இந்த தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் மதுபானங்கள் தரமற்றவை என கிடைத்த முறைப்பாடுகளின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மதுபானங்களுக்கு தரத்தை அறிமுகப்படுத்திய பின்னர் விற்பனை நிலையங்களில் கொள்வனவு செய்யப்பட்ட மதுபான மாதிரிகள் அரச பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திடம் கிடைத்த அறிக்கையை அடுத்து, குறித்த மதுபான தயாரிப்பு தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் மதுபானங்களை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது
மதுவில் கிருமிகளை அழிக்க பயன்படுத்தப்படும் விஷ இரசாயனம்
களுத்துறை மற்றும் குருணாகல் மாவட்டங்களில் அமைந்துள்ள இந்த மதுபான தயாரிப்பு தொழிற்சாலைகள் கடந்த மே 9 ஆம் திகதி ஏற்பட்ட கலவரமான நிலைமையின் போது தீ வைக்கப்பட்டன.
அந்த சம்பவம் நடப்பதற்கு முன்னரே மதுபான தயாரிப்பு தொழிற்சாலைகளுக்கு சீல் வைக்கப்பட்டிருந்தது. மதுபான தொழிற்சாலையில் இருந்து சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ள மதுபானங்களை திரும்ப பெறவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சருக்கு சொந்தமான இந்த மதுபான தயாரிப்பு தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் மதுபானங்களில் கிருமிகளை அழிக்க பயன்படுத்தப்படும் விஷ இரசாயனம் அடங்கி இருந்ததாக பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.
இந்த தவறை சரி செய்த பின்னர், மீண்டும் மதுபான தயாரிப்புக்கு அனுமதி வழங்க மதுவரி திணைக்களம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
அனுமதிப் பத்திரங்களை இரத்துச் செய்ய வேண்டும்
எவ்வாறாயினும் தரமற்ற மதுபானங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களில் அனுமதிப் பத்திரங்களை இரத்துச் செய்ய வேண்டும் என்று மதுபான விற்பனை நிலையங்களின் உரிமையாளர்கள் சங்கம் கூறியுள்ளது.
குருணாகல் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆளும் கட்சியின் முன்னாள் அமைச்சர் ஒருவர் பிரபல மதுபான தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் விற்பனை நிலையங்களின் உரிமையாளர் என்பது குறிப்பிடத்தக்கது.