தேசபந்துவுக்கு முன்பிணையை ஆட்சேபிக்கும் அரச சட்டத்தரணி
கைது செய்யப்படுவதற்கு முன்னர் ஒருவரை முன்பிணையில் விடுவிக்கும் அதிகாரம் நீதவான் நீதிமன்றத்திற்கு இருந்தாலும், அந்த அதிகாரம் சட்டத்தையும் நீதிமன்றத்தின் அதிகாரத்தையும் மதிப்போருக்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்று வாதிடப்பட்டுள்ளது.
மீண்டும் மீண்டும் சட்டத்தை மீறி சட்ட அமைப்பை கேலி செய்தவர்களுக்கு அல்ல என்று சிரேஸ்ட அரச சட்டத்தரணி, ஒஸ்வால்ட் பெரேரா கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
2023 ஏப்ரல் 19 அன்று சட்டமா அதிபர் வழங்கிய சட்ட ஆலோசனையின் அடிப்படையில் குற்றப்புலனாய்வுத்துறையினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட முன்னாள் மேல் மாகாண மூத்த டிஐஜி தேசபந்து தென்னகோன் தாக்கல் செய்த முன்பிணை மனுவிற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அரச சட்டத்தரணி இந்தக் கருத்துக்களை தெரிவித்தார்.
வன்முறை குழுக்கள்
கோட்டாகோகாமா" மற்றும் "மைனாகோகாமா" போராட்ட இடங்களில் அமைதியான போராட்டக்காரர்கள் மீது வன்முறை குழுக்கள் தாக்குதல் நடத்தியதற்கு உதவியதாக கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் தேசபந்து தென்னக்கோன் சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ளார்.
மேற்கு மாகாணத்திற்கு பொறுப்பான மூத்த பொலிஸ் அதிபராக அவர் பணியாற்றிய போது, கொலை முயற்சி மற்றும் சட்டவிரோத தாக்குதல் ஆகியவையும் அவர் மீதான குற்றச்சாட்டுகளில் அடங்கும்.
இந்தநிலையில் குறித்த சம்பவங்கள் தொடர்பாக தென்னக்கோனுக்கு பிணை வழங்குவதற்கான எந்தவொரு நடவடிக்கையையும் அரசு தரப்பு கடுமையாக எதிர்க்கும் என்றும் அரச சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார்.
அனைத்து சமர்ப்பிப்புகளையும் பரிசீலித்த பின்னர், தென்னக்கோனின் முன்பிணை விண்ணப்பத்திற்கு எழுத்துப்பூர்வ ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய ஆகஸ்ட் 7ஆம் திகதி வரை கொழும்பு கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர அவகாசம் வழங்கினார்.
எழுத்துப்பூர்வ ஆட்சேபனைகள் சமர்ப்பிக்கப்பட்டு பரிசீலிக்கப்பட்ட பின்னர், விரைவில் பொருத்தமான உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று நீதிவான் அறிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் தங்க மயில் தங்க அன்ன வாகன உற்சவம்




