சர்ச்சைக்கு மத்தியில் சார்லஸ் முடிசூட்டு விழா! ஆர்ப்பாட்டத்தில் திரண்ட மக்களால் ஏற்பட்ட பதற்றம்
பிரித்தானிய தலைநகர் லண்டனில் முடியாட்சிக்கு எதிராக பதாகைகளுடன் திரண்ட மக்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பிரித்தானியாவின் புதிய மன்னராக மூன்றாம் சார்லஸ் இன்று (06.05.2023) முடிசூடினார்.
முடியாட்சிக்கு எதிரான மக்கள் போராட்டம்
உலகம் எங்கிலும் இருந்து 2,300 சிறப்பு விருந்தினர்கள் இந்த முடிசூட்டு விழாவில் கலந்துகொண்டுள்ளனர். சுமார் இரண்டு மணி நேரம் நீண்ட சடங்குகளுக்கு முடிவில் சார்லஸ் மன்னருக்கு முடிசூட்டப்பட்டது.
இந்த நிலையில், அவர் மன்னராக முடிசூடிய பின்னர் ஊர்வலம் போகும் முக்கிய பகுதிகளில், முடியாட்சிக்கு எதிரான மக்கள் குழு ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அவர்களில் பெரும்பாலானோரை பொலிஸார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சார்லஸ் எங்கள் மன்னரல்ல
முடிசூட்டு விழா கொண்டாட்டத்தை சீர்குலைக்கும் அனைவரும் கைது செய்யப்படுவார் என வெள்ளிக்கிழமையே பொலிஸார் எச்சரித்திருந்தனர்.
இந்நிலையில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மஞ்சள் உடை அணிந்து, சார்லஸ் எங்கள் மன்னரல்ல என முழக்கங்கள் எழுப்பியதுடன், நவீன அரசியலமைப்பு ஜனநாயகத்தில் அரச குடும்பத்திற்கு இடமில்லை என்றும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மேலும் மக்கள் வரிப்பணத்தில் இப்படியான ஒரு கொண்டாட்டம் தேவையா எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
லண்டனில் கடந்த மாதம் முன்னெடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பு ஒன்றில், 64 சதவீத மக்கள் தங்களுக்கு இந்த முடிசூட்டு விழாவில் பெரிதான ஆர்வம் இல்லை என குறிப்பிட்டிருந்தனர்.