கிபுல் ஓயா திட்டத்திற்கு எதிரான போராட்டம் என்பது அரசியல் வேட்கை
30 வருடமாக ஆயுதமேந்திப் போராடியவர்களை பயங்கரவாதிகள் எனக் கூறி ஆயுதமேந்தி போராடியதை ஏற்க மாட்டோம் எனக் கூறியவர் தலைமையில் கிபுல் ஓயா திட்டத்திற்கு எதிரான போராட்டம் என்பது அவரது அரசியல் வேட்கைக்கான போராட்டம் என வவுனியா மாநகரசபையின் எதிர்கட்சி உறுப்பினர் சு.பிறேமதாஸ் தெரிவித்துள்ளார்.
அவரது அலுவலகத்தில் நேற்று(1) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், நெடுங்கேணியில் கிபுல் ஓயா திட்டத்திற்கு எதிரான போராட்டம் தொடர்பில் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டியுள்ளது.
கிபுல் ஓயா எதிர்ப்பு போராட்டம்
எமது நிலம் எமக்கு வேண்டும் என்பது 30 வருடங்களுக்கு முதலே எமது உறவுகள் கேட்ட வார்த்தை. எமது மண் எமக்கு வேண்டும் எனக் கூறி அகிம்சை வழியிலும், ஆயுதமேந்தியும் போராடியவர்கள் அனைவரையும் தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் என முத்திரை குத்தி அவர்கள் போராடியதை ஒரு வகையிலும் ஏற்க மாட்டோம் என பொது வெளியிலும், ஊடகங்களிலும் வெளியிட்டவரின் தலைமையில் கிபுல் ஓயா எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
போராடியவர்கள் பயங்கரவாதிகள் என முத்திரை குத்திவிட்டு அவர்களது பெற்றோர்களையும், உறவினர்களையும் மீண்டும் போராட்டத்திற்கு அழைப்பது வேடிக்கையான விடயம். மீண்டும் ஒரு போராட்டத்தை ஏற்படுத்தி எமது மக்களுக்கு பிரச்சனைகளை ஏற்படுத்தப் பார்க்கிறார்கள்.

இவர்கள் அந்நிய சக்திகளால் ஏவி விடப்பட்ட கைக் கூலிகள். எமது போராட்டம் மழுங்கடிக்கப்பட்டதும் அவர்களால் தான். இவர்கள் பல வழிகளில் தென்னிலங்கையுடன் உறவுகளைக் கொண்டாடிக் கொண்டு யுத்தத்தால் ஏற்கனவே பாதிக்கப்பட்ட மக்களை மீண்டும் போராட்டத்திற்கு அழைத்து பலிகடாய் ஆக்கப் பார்க்கிறார்கள்.
தமிழ் எனக் கூறி தமிழ் தேசியக் கூட்டமைப்பாக இருந்த 22 நாடாளுமன்ற உறுப்பினர்களும் சிதைந்து ஒற்றுமையற்று இருக்கிறார்கள். 16 வருடங்கள் வீணாகி போயுள்ளது. போராட்டம் சிதைவடைந்த பின்பு அனைத்து கட்சிகளும் இணைந்து ஒன்றாக இருந்திருந்தால் எமக்கு ஏதாவது ஒரு முடிவு கிடைத்திருக்கும்.
இனப்பிரச்சினை
மக்களால் விரட்டப்பட்டு தோற்கடிக்கப்பட்ட பின்னர் தற்போது ஒன்று சேர்ந்து நிற்கிறார்கள். இதற்கு காரணம் என்ன.தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்த பலர் காணாமல் போய்விட்டார்கள். சிதைக்கப்பட்டுள்ளார்கள். நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்கள்.
இதற்கெல்லாம் காரணமாக இருந்த தமிழ் தலைமையை ஏற்க முயற்சி எடுக்கிறார்கள். மீண்டும் ஒற்றுமையாக வருவது சந்தோசம். ஆனால் உங்களது உறவுகள் உங்கள் குடும்பத்தினர் எங்கே.அவர்களையும் கூட்டி வந்து நெடுங்கேணியில் போராடுங்கள்.
நாங்களும் வருகின்றோம். ஆனால் அப்பாவி மக்களை அழைத்து போராடி உங்கள் அரசியல் வேட்கையை தணிக்க முயலாதீர்கள். இவர்களின் தலைமையில் போராட முயல்வது உங்களை பிள்ளைகளை நீங்களே பயங்கரவாதிகள் என முத்திரை குத்தியதற்கு சமனாகும்.
தமிழர் தாயக கட்சியான கூட்டமைப்புக்குள் அழைய விருந்தாளியாக வந்து எமது மக்களின் கடைசி நம்பிக்கையாக இருந்த தலைவரால் உருவாக்கப்படட தமிழ் தேசியக கூட்டமைப்பை இல்லாதொழித்து, தமிழரசுக் கட்சியை சிதைத்து முதலமைச்சர் பதவியை கைப்பற்றி தாயாக போராட்டம், இனப்பிரச்சினை இல்லை எனக் கூறி காணாமல் போனாவர்கள எனக் கூறும் அனைவரும் புலிப்பயங்கரவாதிகள் எனக் கூறி முதலமைச்சராக ஒரு கையெழுத்து இட்ட பின் நிர்ததியாகும் நிலை உருவாகும்.
எனவே தவறான ஒருவரின் கையில் முதலமைச்சர் பதவி போகும் போது ஒரு கையெழுத்து தமிழர் வரலாற்றை புரட்டி போடும். அதற்கானஏற்பாடே இந்தப் போராட்டம். எனவே மக்கள் சிந்தித்து செயற்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.