உத்தேச ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் நாடாளுமன்றில் நிறைவேற்றம்
உத்தேச ஊழல் தடுப்பு சட்டமூலம் நாடாளுமன்றத்தில் பல திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஜூலை 06 ஆம் திகதி சபையில் சமர்ப்பிக்கப்பட்ட குறித்த சட்டமூலம் இன்று(19.07.2023) நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த சட்டமுலம், குழுநிலை விவாதம் இன்றி,சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்கா (TISL) நிறுவனம் உட்பட பல தரப்பினர் அண்மையில் சட்டமூலத்தின் உட்பிரிவுகளுக்குள் உள்ள முக்கிய பிரச்சினைகளை முன்னிலைப்படுத்தியதால், இந்தச் சட்டமூலம் பல சர்ச்சைகளால் சூழப்பட்டது.
சபாநாயகர் உச்ச நீதிமன்றத்துக்கு உருதி
இது தொடர்பாக ஒரு மனுவை உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்த TISL நிறுவனம், ஊழல் தடுப்பு சட்டமூலத்தில் காணப்படும் உட்பிரிவு 28(3), 161 மற்றும் 119 உட்பட மொத்தம் 37 சரத்துக்களை முற்படுத்தியது.
மேலும் இந்த சட்டமூலம் கருத்துச் சுதந்திரம்,வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றின் கருத்துகளைப் பாதிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இதற்கமைய சட்டமூலத்திலுள்ள சில சரத்துக்கள் அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணானவை என்றும், எனவே திருத்தங்களுக்குப் பிறகு தாக்கல் செய்யப்பட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
எவ்வாறாயினும், உச்ச நீதிமன்றத்தின் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ள திருத்தங்கள் சட்டமூலத்தில் மேற்கொள்ளப்படுமாயின், மேற்படி முரண்பாடுகள் நிறுத்தப்படும் என சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன, உச்ச நீதிமன்றத்துக்கு உருதி வழங்கியுள்ளார்.
இதற்கமைய, தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, சட்டமூலத்தின் 8 (3), 136, 141, 142 மற்றும் 156 ஆகிய பிரிவுகளில், மனுதாரர்கள் வெளிப்படுத்திய விடயங்களில் திருத்தங்கள் செய்யப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |