மொட்டுக்கட்சியில் மற்றுமொரு அணி: தனியாக கூடி கலந்துரையாடலையும் நடத்தியுள்ளனர்
பொருளாதார உருவாக்கும் வேலைத்திட்டங்கள் தொடர்பான பல யோசனைகளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அணியொன்று தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனடிப்படையில்ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்குள் மற்றுமொரு அணி தனியாக கூடிய கலந்துரையாடி இந்த யோசனைகள முன்வைக்க தீர்மானித்துள்ளது.
அமைச்சர் ரமேஷ் பத்திரன உட்பட ராஜாங்க அமைச்சர்களும் யோசனைகள் பற்றி கலந்துரையாடியுள்ளனர்
அமைச்சர் ரமேஷ் பத்திரன,மகிந்தானந்த அளுத்கமகே, ராஜாங்க அமைச்சர்கள் சீதா அரம்பேபொல, அனுஷ பெஸ்குவல், சிசிர ஜயகொடி, மதுர விதானகே ஆகியோர் தனியாக கூடி இது சம்பந்தமாக கலந்துரையாடியுள்ளனர்.
இது சம்பந்தமாக கருத்து வெளியிட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே, தமது அணி கூடி பல விடயங்கள் குறித்து கலந்துரையாடியதாகவும் அரச நிதி முகாமைத்துவம் சம்பந்தமாக அமைச்சர் ஒருவரை நியமிக்க வேண்டும் என்று யோசனை முன்வைக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.
அரச நிதி முகாமைத்துவ அமைச்சர் ஒருவரை நியமிப்பது அரச வருமான வரி திணைக்களத்திற்கு வெளியில் ஒழுங்குப்படுத்தல் நிறுவனத்தை நியமிப்பது தொடர்பான யோசனைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
யோசனைகளை பாராட்டிய அனுரகுமார மற்றும் கரு ஜயசூரிய
நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் பல கட்சிகள் இந்த வேலைத்திட்டத்தை பாராட்டியுள்ளன.அனுரகுமார திஸாநாயக்க நாடாளுமன்றத்தில் என்னை சந்தித்து இது சிறந்த திடடம் எனவும் தானும் அந்த நிலைப்பாட்டில் இருப்பதாகவும் கூறினார்.
அத்துடன் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தொலைபேசியில் தொடர்புக்கொண்டு, இந்த யோசனையை பாராட்டியதுடன் நீதியான சமூகத்திற்கான அமைப்பின் ஊடாக இதனையே செய்ய முயற்சித்ததாகவும் கூறினார்.
நாங்கள் இது தொடர்பான 23 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் விவாதம் ஒன்றை கோரியுள்ளோம். நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க நாடாளுமன்றத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளை ஒன்றிணைக்கவே நாங்கள் எதிர்பார்த்துள்ளோம்.
இந்த யோசனையை சரியாக நடைமுறைப்படுத்ததினால், வருடாந்தம் அரசுக்கு 3 ஆயிரம் பில்லியன் வரி வருமானத்தை பெற முடியும் எனவும் மகிந்தானந்த அளுத்கமகே கூறியுள்ளார்.