இலண்டன் மாநகரில் நடைபெறவுள்ள மற்றுமொரு மாபெரும் கலைமாலை நிகழ்வு
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் ஐக்கிய இராச்சிய கிளையினரால் வருடந்தோறும் நடாத்தப்படும் கலைமாலை நிகழ்வு இந்த வருடமும் நடைபெறவுள்ளது.
குறித்த நிகழ்வானது இம்மாதம் 29 ஆம் திகதி சனிக்கிழமையன்று தென்கிழக்கு இலண்டனிலுள்ள கீட்புறுக் (Kidbrooke) நகரத்திலுள்ள ஹோலி அக்டமி என்னும் பாடசாலை மண்டபத்தில் (The Halley Academy, Corelli Road, SE3 8EP) பிற்பகல் 3:00 மணிக்கு மிகப்பிரமாண்டமாக நடைபெற ஏற்பாடாகியுள்ளதாக சங்கத்தின் விழா ஏற்பாட்டுக் குழுமத்தினர் அறிவித்துள்ளனர்.
கலைகலாச்சார நிகழ்வுகள்
ஐக்கிய இராச்சியக் கிளையானது இவ்வருடத்துடன் தமது 24ஆவது வருடத்தினை பூர்த்தி செய்வதுடன், 18வது கலைமாலை நிகழ்வினை நடாத்துகின்றது.
இந்நிகழ்வில் கலந்து சிறப்பிப்பதற்காக தாயகத்திலிருந்து தற்போது வருகை தந்துள்ள அந்தக்கல்லூரியின் பழைய மாணவரும், முன்னாள் அதிபரும், ஓய்வு பெற்ற கல்விப்பணிப்பாளருமான ச. நாகரத்தினம் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பிக்கவுள்ளார்.
அத்துடன் இவ்விழாவானது முற்றுமுழுதாக எம்மவர் கலைகலாச்சார நிகழ்வுகளுக்கு முன்னுரிமையளித்து இளந்தலைமுறையினரின் கலைநிகழ்ச்சிகளை ஒழுங்குபடுத்தி நடாத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இவ் விழாவில் இரண்டாம் தலைமுறையினரின் கலை கலாசார நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளததாக தெரிவிக்கப்படுகிறது.
நிவாரணப்பணிகள்
அத்துடன், தமிழர் பாரம்பரிய சிறப்பு நாட்டுக் கூத்துக்களும் இடம் பெறுவதுடன் இப்பாடசாலை சமூகத்தினை சேர்ந்த சாதனைகள் புரிந்த மற்றும் புரிந்து கொண்டிருக்கும் இளம் தலைமுறையினரை கௌரவிக்கும் சிறப்பு நிகழ்வும் இடம் பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே இந்நிகழ்வில் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி பழைய மாணவர்களையும், புதுக்குடியிருப்பு வாழ், புலம்பெயர்ந்த மக்களையும் கலந்து சிறப்பிக்குமாறு இவ்விழா ஏற்பாட்டுக் குழுமத்தினர் அறியத்தருகின்றனர்.
2000ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இச்சங்கமானது இன்று பல நூற்றுக் கணக்கான உறுப்பினர்களைக் கொண்டு மிகச்சிறப்பாக இயங்கி வருகிறது . அத்தோடு, கடந்த இருபத்தி நான்கு வருடங்களாக புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியின் கல்வி, கலை, விளையாட்டு மற்றும் பௌதிக வளங்களின் விருத்தியில் முக்கிய பங்கு வகித்துவருகிறது.
புதுக்குடியிருப்பு கிராம அபிவிருத்தியிலும் மற்றும் இடர்க் கால நிவாரணப்பணிகளில் குறிப்பாக சுனாமி போன்ற இடர்காலங்களிலும் அப்பகுதி மக்களின் வறுமை ஒழிப்பு, துயர்துடைப்பு போன்ற சமூகப்பணிகளிலும் பெரும் தொண்டாற்றி வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |