அனோஜனின் விடுதலை உறுதி..! ஓரிரு வாரங்களில் நாடு திரும்புவார் என அமைச்சர் அறிவிப்பு
புதிய இணைப்பு
மரண தண்டனையிலிருந்து விடுவிக்கப்பட்ட சிவராசா அனோஜன் ஓரிரு வாரங்களில் நாடு திரும்புவார் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த இலங்கையரான சிவராசா அனோஜனுக்கு எதிரான வழக்கை சவூதி அரேபியாவின் பொதுத்துறை வழக்குத்தொடுநர் கைவிடத் தீர்மானித்துள்ளதாகவும், அவருக்கு எதிராக சவூதி நீதிமன்றத்தில் இனி எந்த வழக்கும் இல்லை என்றும் வெளிநாட்டு அமைச்சர் விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.
அவர் தற்போது சவூதி அரேபியாவில் காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், ஓரிரு வாரங்களுக்குள் இலங்கைக்கு அழைத்து வரப்படுவார் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
முதலாம் இணைப்பு
இலங்கையைச் சேர்ந்த சிவராசா அனோஜனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை சவுதி அரேபிய உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளதாக இலங்கை வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா (Arun Hemachandra) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான அறிவிப்பு இன்று(11.11.2026) வெளியிடப்பட்டுள்ளது.
அனோஜனின் விடுதலை உறுதி
இலங்கை அரசாங்கம் தொடர்ந்து மேற்கொண்ட தூதரக மற்றும் சட்டரீதியான முயற்சிகளின் விளைவாக இந்த முடிவு கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, அனோஜனின் மரண தண்டனை தொடர்பில் முதன்முதலில் குரல் கொடுத்த சமூக செயற்பாட்டாளர் ராஜ்குமார் ராஜீவ்காந்த், அவரது முகநூல் பக்கத்தில் இதனை உறுதிப்படுத்தும் வகையில் பதிவொன்றையும் வெளியிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.