அனோஜனின் உயிரைக் காப்பாற்றுங்கள்! இலங்கை அரசிடம் சுரேஷ் பிரேமச்சந்திரன் அவசர கோரிக்கை
கல்முனையைச் சேர்ந்த சிவராசா அனோஜனை மரண தண்டனையிலிருந்து காப்பாற்ற இலங்கை அரசாங்கம் ராஜதந்திர நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் பேச்சாளருமான சுரேஷ் க. பிரேமச்சந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
மதங்களின் உண்மையான கோட்பாட்டை மதித்து அனோஜனை விடுதலை செய்ய வேண்டும் சிவராசா அனோஜனின் விவகாரம் தொடர்பாக சுரேஷ் க. பிரேமச்சந்திரன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
மரண தண்டனை
கல்முனையை வதிவிடமாகக் கொண்ட சிவராசா அனோஜன் என்ற இளைஞர், தனது சமூக வலைத்தளத்தில் இஸ்லாமிய மதத்திற்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் ஓரிரு வசனங்களை எழுதியதாகக் கூறப்படும் காரணத்திற்காக சவுதி அரேபிய நீதித்துறையால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
சவுதி அரேபியாவின் சட்டதிட்டங்கள் தொடர்பில் அனோஜனுக்கு போதிய அறிவு இல்லாத நிலையில், தான் எழுதிய கருத்து ஒரு மதத்திற்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் என்பதை அறியாமல் செய்த தவறுக்காக மரண தண்டனை விதிப்பதை மனிதாபிமானமான செயலாகக் கருத முடியாது என சுரேஷ் பிரேமச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

அனோஜன் தான் எழுதிய கருத்து தவறானது என்பதை அறிந்தவுடன் அதனை சமூக வலைத்தளத்திலிருந்து நீக்கியதுடன், பகிரங்க மன்னிப்பும் கோரியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறான சூழ்நிலையில், அறியாமையால் செய்யப்பட்ட தவறுக்கு மரண தண்டனைதான் தீர்வா என்ற கேள்வி எழுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அனைத்து மதங்களும் அன்பையும் சகிப்புத்தன்மையையும் போதிக்கின்றன சகல மதங்களும் அன்பையும் சகிப்புத்தன்மையையுமே போதிப்பதாகவும், அறியாமையால் அல்லது தெரியாமல் செய்யப்படும் தவறுகள் மன்னிக்கப்பட வேண்டும் என வலியுறுத்துவதாகவும் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
எனவே, மதங்களின் உண்மையான கோட்பாடுகளை மதித்து, இந்த விடயங்களை சவுதி அரேபிய நீதித்துறை கவனத்தில் கொள்ள வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
ராஜதந்திர ரீதியில் பேச்சுவார்த்தை
காசாவில் இடம்பெற்று வரும் இனப்படுகொலைக்கு எதிராக உலக மக்கள் மொழி, மதம் மற்றும் இனம் கடந்து குரல் கொடுத்து வருவதாகவும், அங்கு பாதிக்கப்படுபவர்களின் மதம் அல்லது மொழியைப் பார்க்காமல் அவர்கள் மனிதர்கள் என்ற அடிப்படையில் அவர்களுக்கான உரிமைகளை அங்கீகரிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான மனிதாபிமானக் கண்ணோட்டத்துடன் பார்க்கும்போது, ஒரு சிறிய தவறுக்காக மரண தண்டனை விதிப்பது நியாயமானதா என்ற கேள்வி எழுவதாகவும் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
குடும்பத்தின் எதிர்காலம் பாதிக்கப்படும் அனோஜனின் பெற்றோர் தமது வாழ்வாதாரத்திற்காக அவரை நம்பியுள்ளதாகவும், அவர் இல்லாத நிலையில் அவரது முழுக் குடும்பத்தின் எதிர்காலமும் கேள்விக்குறியாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சட்டங்களும் தண்டனைகளும் ஒரு மனிதனுக்கு திருந்தி வாழ்வதற்கான வாய்ப்பை வழங்கும் வகையில் அமைய வேண்டும் எனவும், ஒருவரை இல்லாமல் செய்வதன் மூலம் குற்றங்கள் குறைந்துவிடாது எனவும் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை இலங்கை ஜனாதிபதியும் இலங்கை அரசாங்கமும் சவுதி அரேபிய அதிகாரிகள் மற்றும் அந்நாட்டு மன்னருடன் ராஜதந்திர ரீதியில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதன் மூலம் சிவராசா அனோஜனை மரண தண்டனையிலிருந்தும் ஏனைய பொருளாதார தண்டனைகளிலிருந்தும் காப்பாற்றி, மனிதாபிமானத்தை நிலைநிறுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என சுரேஷ் க. பிரேமச்சந்திரன் வலியுறுத்தியுள்ளார்.