தேசியப் பட்டியலுக்கு புதிய உறுப்பினர் – இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் அறிவிப்பு
இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக மட்டக்களப்பு, ஓட்டமாவடியைச் சேர்ந்த சட்டத்தரணி ஹபீப் ரிபான் நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் ஒரு வருட காலத்திற்கு தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக செயற்படவுள்ளதாக கட்சியின் செயலாளர் நிசாம் காரியப்பர் தெரிவித்துள்ளார்.
தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்
சுழற்சி முறையின் அடிப்படையில் இந்த நியமனம் இடம்பெற்றுள்ளதாகவும், முந்தைய சுழற்சியில் அம்பாறை மாவட்டத்திற்கு வழங்கப்பட்டிருந்த சந்தர்ப்பத்தைத் தொடர்ந்து, இம்முறை அந்த வாய்ப்பு மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்று கட்சித் தலைவர் கௌரவ ரவூஃப் ஹக்கீம் அவர்களின் பணிப்புரையின் பேரில், ஒட்டமாவடியைச் சேர்ந்த இளம் சட்டத்தரணி ஹபீப் ரிஃபானை ஒரு வருட காலத்திற்கு தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக நியமிப்பதை உத்தியோகபூர்வமாக அறிவித்து தேர்தல் ஆணைக்குழுவிற்கு கடிதம் அனுப்பினேன்.
— Nizam Kariapper (@Nizamkariapper) September 21, 2026
கட்சியின்… pic.twitter.com/yUyVHzjEXD
கட்சியின் வேண்டுகோளுக்கு இணங்க அண்மையில் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட ஹபீப் ரிபான் முன்வந்திருந்தமை அவரது தெரிவில் முக்கிய காரணியாக அமைந்ததாக நிசாம் காரியப்பர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், கல்குடா தேர்தல் தொகுதிக்கு தற்போது நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் இல்லாததும் கட்சித் தலைமையினால் கருத்திற்கொள்ளப்பட்ட காரணிகளில் ஒன்றாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான தகவல்களை நிசாம் காரியப்பர் தனது X சமூக ஊடகப் பதிவின் மூலம் வெளியிட்டுள்ளார்.