ஜோசப்பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பிலான வழக்கினை தொடர்ந்து நடத்த முடியாதென அறிவிப்பு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான ஜோசப்பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பிலான வழக்கினை தொடர்ந்து நடத்த முடியாதெனச் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் மட்டக்களப்பு மேல் நீதிமன்றுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதன் அடிப்படையில் எதிர்வரும் புதன்கிழமை குறித்த வழக்கு தொடர்பான தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப்பரராஜசிங்கம் 2005ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25ஆம் திகதி மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்டார்.
குறித்த சம்பவம் தொடர்பாகத் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் உள்ளிட்ட ஐந்து பேர் சந்தேகத்தின் பேரில் கடந்த 2015ஆண்டு கைது செய்யப்பட்டு தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
ஐந்து பேரும் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், 2015ஆம் ஆண்டு தாங்கள் கைது செய்யப்பட்டுக் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் பெறப்பட்ட 1ஆம், 02 ஆம் எதிரிகளின் வாக்கு மூலமானது சுயேச்சையாக வழங்கப்படவில்லை, தூண்டுதல் அல்லது அச்சுறுத்தல் காரணமாக அந்த வாக்கு மூலத்தினை வழங்கியிருந்தார்கள், பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் நேரடியாக நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு வாக்குமூலம் வழங்கியிருந்ததாகத் தெரிவித்து மேன்முறையீட்டு நீதிமன்றில் செய்யப்பட்ட மீளாய்வு விண்ணப்பித்ததன் பிரகாரம் குறித்த ஒப்புதல் வாக்குமூலத்தினை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்ததன் அடிப்படையில் 24ஆம் திகதி மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் சட்டமா அதிபரின் ஒப்புதலின் பேரில் பிணை வழங்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இன்று குறித்த வழக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்ற விசேட நீதிபதி டி.சூசைதாசன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
சட்டமா அதிபர் திணைக்களம் இந்த வழக்கினை தொடர்ந்து நடத்த முடியாது என்ற அறிவிப்பினை மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் தெரிவித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திகாந்தன் தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில் நாளை மறுதினம் நாங்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்ற குறித்த வழக்கிற்கான தீர்ப்பு வரும் என மேலும் தெரிவித்துள்ளார்.






