நாடாளுமன்ற அமர்வு தொடர்பான முக்கிய அறிவிப்பு
நாடாளுமன்ற அமர்வு தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதற்கமைய இன்று(18.06.2024) முதல் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை நாடாளுமன்றம் கூடவுள்ளதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றம் இன்று காலை 9.30 மணிக்கு கூடவுள்ளதுடன் காலை 9.30 முதல் 10.30 வரை வாய்மூல விடைக்கான வினாக்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
விவாதங்கள்
அதனையடுத்து, காலை 10.30 முதல் 5.00 மணி வரை சுற்றுலாப் பயணத்துறைச் சட்டத்தின் கீழ் விசேட வர்த்தமானிகளில் வெளியிடப்பட்டுள்ள ஐந்து கட்டளைகள், உரித்துப் பதிவுச் சட்டத்தின் கீழ் விசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதிகள், காணிகள் கட்டளைச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் மற்றும் விளையாட்டில் ஊக்கப் பதார்த்தப் பயன்பாட்டிற்கெதிரான சமவாயச் சட்டத்தின் கீழ் விசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதிகள் என்பன விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.
மேலும் நாளை 19 ஆம் திகதி கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் கீழ் விசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதிகள் மற்றும் தெங்கு அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் தீர்மானம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.
எதிர்வரும் 20 ஆம் திகதி யுனெஸ்கோவிற்கான இலங்கை தேசிய ஆணைக்குழு சட்டமூலம் மற்றும் பெண்களின் வலுவூட்டல் சட்டமூலம் இரண்டாம் மதிப்பீடு என்பன விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.