விமானங்களுக்கான எரிபொருள் தட்டுப்பாடு குறித்து வெளியான அறிவிப்பு
இலங்கையில் விமானங்களுக்கான எரிபொருள் பற்றாக்குறை இருப்பதன் காரணமாக எரிபொருள் தேவைக்கு மாற்று ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு சிவில் விமான சேவைகள் அதிகாரசபை அறிவித்துள்ளது.
சிவில் விமான சேவை அதிகார சபையின் பணிப்பாளர் ரெஹான் வன்னியப்பாவுடன் ப்ளூம்பர்க் செய்திச் சேவை தொலைபேசி ஊடாக நடத்திய நேர்காணலில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
விமானங்களுக்கான எரிபொருள் பற்றாக்குறை
இலங்கையில் தற்போதைக்கு விமானங்களுக்கான எரிபொருள் பற்றாக்குறை காணப்படுவதன் காரணமாக வேறு நாடுகளின் விமான நிலையங்களில் எரிபொருள் நிரப்பிக் கொள்ளவோ அல்லது பயண ஆரம்பத்திலேயே தேவையான எரிபொருளைப் பெற்றுக் கொண்டோ இலங்கைக்கு வருகை தருமாறு விமான சேவைகளுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் கையிருப்பில் உள்ள மிகக் குறைந்த அளவிலான விமான எரிபொருளை முகாமைத்துவம் செய்து கொள்ளும் நோக்கில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை
எனினும் எமிரேட்ஸ் போன்ற விமான சேவைகள் தங்களுக்குத் தேவையான எரிபொருளை பயண ஆரம்பத்திலேயே நிரப்பிக் கொண்டு இலங்கைக்கான விமான சேவைகளை நடத்திக் கொண்டிருப்பதாக ப்ளூம்பர்க் செய்திச்சேவை குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பாக கருத்து வௌியிட்டுள்ள விமான நிலையத் தலைவர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ. சந்திரசிறி, இது ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மட்டுமே என்றும் இதன் மூலம் விமான சேவைகளுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்றும் தெரிவித்துள்ளார்.