பாடசாலைகள் மீளத் திறப்பது தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு
கோவிட் அச்சம் காரணமாக மூடப்பட்டுள்ள பாடசாலைகளை மீண்டும் திறப்பது குறித்து எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை தீர்மானிக்கப்படும் என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்தார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் பங்கேற்று உரையாற்றியபோதே அவர் இந்தத் தகவலை வெளியிட்டார்.
இதன்படி, நாடு முழுவதிலும் உள்ள பாடசாலைகள் எதிர்வரும் 30ஆம் திகதிவரை மூடப்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் 02ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இது தொடர்பில் இறுதிமுடிவு எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.
இலங்கையில் கடந்த சில தினங்களாக வேகமாகப் பரவி வருகின்ற கோவிட் வைரஸ் காரணமாக நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்துப் பாடசாலைகள், முன்பள்ளிகள் மற்றும் அறநெறிப் பாடசாலைகள் அனைத்துக்கும் எதிர்வரும் 30ஆம் திகதி வரை விடுமுறை வழங்குவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, மே 10 ஆம் திகதி முதல் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்க
முடியும் என்றும் கல்வி அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.