கொழும்பிலுள்ள நீர்நிலையில் உயிரிழந்துள்ள உயிரினங்கள் - ஆபத்து குறித்து தீவிர விசாரணை
கொழும்பு பேரே ஏரி பகுதியில் திடீரென பாரிய அளவிலான பறவைகள் விலங்குகள் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளன.
இந்த விலங்குகள் உயிரிழந்தமை தொடர்பான நீர் மாதிரிகள் குறித்த ஆய்வு அறிக்கையை 3 நாட்களுக்குள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேசிய நீர்வள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதற்கான அறிக்கை மீன்பிடி மற்றும் நீர்வள அமைச்சுக்கு சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுற்றுச்சூழல் ஆய்வுகள் பிரிவின் தலைவர் கலாநிதி ஷியாமலி வீரசேகர தெரிவித்தார்.
கொழும்பு மாநகர சபை
இதேவேளை, கொழும்பு மாநகர சபை பயன்படுத்திய இரசாயனம் காரணமாக இந்த விலங்குகள் உயிரிழந்ததாக வெளியான செய்திகளை உறுதிப்படுத்த முடியாதென கொழும்பு மாநகர சபையின் தலைமை கால்நடை மருத்துவர் முகமது இஜாஸ் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த 25 விலங்குகளில், 7 விலங்குகளின் உடல்கள் ஹோமாகம கால்நடை புலனாய்வுப் பிரிவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதுவரை மேற்கொண்ட விசாரணைகளுக்கு அமைய பறவைக் காய்ச்சல் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பரிசோதனை அறிக்கை
நாங்கள் பேராதனை கால்நடை புலனாய்வுப் பிரிவிற்கும் அறிவித்துள்ளோம். திங்கட்கிழமைக்குள் அனைத்து மாதிரிகளையும் அனுப்புமாறு கோரப்பட்டுள்ளது.
பரிசோதனை அறிக்கைகள் முழுமையாக கிடைக்கப் பெற்றதன் பின்னர் விலங்குகளின் இறப்புக்கான சரியான காரணத்தை தீர்மானிக்க முடியும் என கொழும்பு மாநகர சபையின் தலைமை கால்நடை மருத்துவர் முகமது இஜாஸ் மேலும் தெரிவித்துள்ளார்.