சுகாதார அட்டையின்றி கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய அமைச்சின் செயலாளர்
கொவிட் சுகாதார அட்டையின்றி சென்ற சுற்றுச்சூழல் அமைச்சின் செயலாளர் வைத்தியர் அணில் ஜாசிங்க (Anil Jasinghe) கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிக்கொண்டுள்ளார்.
தென்கொரியாவில் நடைபெறும் ஆசிய பசுபிக் சுற்றுச்சூழல் பிராந்திய மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நேற்று இரவு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தந்த சுற்றுச்சூழல் அமைச்சின் செயலாளரால் தடுப்பூசி செலுத்தியதனை உறுதி செய்ய முடியாமல் போயுள்ளது.
தடுப்பூசி செலுத்தியமைக்கான அட்டையை கொண்டு வராமையினால் அவரால் விமானத்தில் ஏற முடியாமல் போயுள்ளது. அவர் பல மணி நேரம் விமான நிலையத்திலேயே தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
நேற்று இரவு 8.30 மணியளவில் டுபாய், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வழியாக தென் கொரியா செல்ல, EK-653 என்ற எமிரேட்ஸ் விமானத்தில் பயணிப்பதற்காக அவர் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகைத்தந்திருந்தார்.
தான் தடுப்பூசி பெற்றுக் கொண்டதாகவும் அதனை உறுதி செய்யும் அட்டையை கொண்டு வருவதற்காக வீட்டில் தேடிய போதிலும் அதனை கண்டுபிடிக்க முடியவில்லை, அது காணாமல் போயுள்ளதாக வைத்தியர் அணில் ஜாசிங்க (Anil Jasinghe) தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக கொவிட் தடுப்பூசியின் புகைப்பட பிரதி ஒன்றை கொழும்பு வைத்தியசாலையில் இருந்து வட்ஸ்அப் தொழில்நுட்பம் ஊடாக பெற்றக் கொள்வதற்கு அவர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார் என தெரியவந்துள்ளது.