எமது கட்சியின் புதிய நிர்வாகக் கூட்டத்தை குழப்பவே ஆனந்தசங்கரி விரும்புகிறார்: த.இராசலிங்கம்
தேர்தல் திணைக்களத்துக்கு எமது கட்சியின் புதிய நிர்வாகக் கூட்டம் தொடர்பான அறிக்கையை அனுப்பி வைத்துள்ள நிலையில் அதனைக் குழப்பவே ஆனந்தசங்கரி விரும்புகிறார் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் த.இராசலிங்கம் தெரிவித்துள்ளார்.
யாழ்.ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
நாங்கள் ஏனைய கட்சிகளுடன் இணைந்து செயற்படத் தயாராக உள்ளோம். நாங்களே முதன்முதலில் தமிழர்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்காகத் தோற்றுவிக்கப்பட்ட கட்சி. முப்பெரும் தலைவர்கள் கூடி தமிழர் விடுதலைக் கூட்டணி உருவாக்கப்பட்டது.
முன்னாள் செயலாளர் நாயகம் ஆனந்தசங்கரி தன்னால் மட்டுமே தமிழர் பிரச்சனையைத் தீர்க்க முடியும் என்றும் ஏனைய கட்சிகளால் தமிழர் பிரச்சினையைத் தீர்க்க முடியாது என்றார். இதனை ஏற்றுக்கொள்ள முடியாது.
நாங்கள் தற்போது பலவீனமாக இருக்கிறோம். கட்சி பலவீனமாக உள்ளது. தமிழர்களுக்குச் சரியான தீர்வு கிடைக்க வேண்டும் என்பதே எமது விருப்பம். அதற்காக எமது முழு பங்களிப்பையும் நாங்கள் செய்யத் தயாராக இருக்கின்றோம். தமிழர் விடுதலைக் கூட்டணியினுடைய கூட்டமொன்றின்போது ஆனந்த சங்கரி உட்படக் கட்சியினுடைய உறுப்பினர்கள் பலரும் கலந்துரையாடியபோது இடைநடுவே ஆனந்தசங்கரி, வெளியேறினார்.
அதன் பின்னர் அங்கு கூடியிருந்த நாங்கள் ஒரு தற்காலிகமான ஒரு நிர்வாகத்தை உருவாக்கி பின்னர் புதிய நிர்வாகத்தைத் தெரிவு செய்தோம். தற்போது நான் தலைவராக உள்ளேன். செயலாளர் நாயகமாகக் கிழக்கு மாகாணத்தின் யோகராஜா இருக்கின்றார்.
தற்போது முன்னாள் செயலாளர் நாயகம் ஆனந்த சங்கரி விரைவில் பொதுச்சபையைக் கூட்டப் போகிறேன் என்று கூறியுள்ளார். அவரால் அவ்வாறு செய்ய முடியாது. நாங்கள் தேர்தல் திணைக்களத்துக்கு புதிய நிர்வாகம் தொடர்பாகவும் கூட்டம் கூடியது தொடர்பான அறிக்கையையும் அனுப்பி வைத்துள்ளோம்.
இதனைக் குழப்பவே ஆனந்தசங்கரி விரும்புகிறார். தலைவரின் பேச்சைக் கேட்டு நடக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. ஆனால் அங்கே எதுவுமே அவ்வாறு நடப்பதில்லை. புதியவர்களைக் கொண்டுவந்து பொதுச்சபையில் போடவே ஆனந்தசங்கரி விரும்புகிறார். புதியவர்களை உள்வாங்கி பழையவர்களை பொதுச் சபையில் இருந்து வெளியேற்ற முயற்சிக்கிறார்.
புதியவர்களைப் பொதுச்சபையில் இணைக்கமுடியாது. மத்திய செயற்குழுக் கூட்டத்தில் கூடி இவர்களைக் கட்சியில் இணைக்கலாமா என்று தீர்மானிக்க முடியும். அதன் பின்னரே பொதுக்குழுவில் இணைப்பதா இல்லையா என்பதைத் தீர்மானிக்க முடியும். தனியே ஆனந்தசங்கரி அவர்கள் தீர்மானிக்க முடியாது. அவர் சிபாரிசு செய்ய முடியுமே தவிர வேறு எதுவும் முடியாது.
அவர் செலவழிக்கும் கட்சிப் பணத்திற்கும் கணக்கில்லை. கட்சியிலிருந்து பழைய உறுப்பினர்கள் வெளியேற்ற முயற்சிக்கின்றார். இதன் மூலம் தன்னை யாரும் கேள்வி எழுப்பமாட்டார்கள் என அவர் நினைக்கிறார் போல. அது நடைமுறைச் சாத்தியமற்றது. நாம் அச்சுறுத்தல் விடுத்ததாகக் கூறி எமக்கெதிராக ஆனந்தசங்கரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருக்கின்றார்.
நிதி சம்பந்தமான பல பிரச்சினைகள் காணப்படுகின்றன. கட்சியின் சொத்துக்களைக் கட்சியின் அனுமதியின்றி தன்னிச்சையாக விற்பனை செய்துள்ளார்'' இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஊடக சந்திப்பில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் இணை பொருளாளர்
த.திருஞானசம்பந்தர்,
நிர்வாக செயலாளர் க.கௌரிகாந்தன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
ரூ. 50 கோடிக்கும் மேல் வசூல் செய்த கட்டா குஸ்தி 2 திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா.. இதோ Cineulagam
வாய்ப்பு கொடுக்க படுக்கைக்கு அழைத்த நபர், அய்யனார் துணை நடிகை வேதனை... சொன்ன திடுக்கிடும் தகவல் Cineulagam
பிரித்தானியாவில் பெண் காவலரின் பொய் துஷ்பிரயோக குற்றச்சாட்டு: மீண்டும் சிறையில் அடைப்பு News Lankasri