ஆனந்தசுதாகரின் பிள்ளைகளை பராமரித்து வந்த பேத்தியார் உயிரிழப்பு!
தமிழ் அரசியல் கைதியாக 17 ஆண்டுகள் சிறையில் இருக்கும் ஆனந்தசுதாகரின் பிள்ளைகளை பராமரித்து வந்த பேத்தியார் நேற்றிரவு (19.11.2025) உயிரிழந்துள்ளார்.
ஆனந்தசுதாகரின் மனைவி கடந்த 2018ஆம் ஆண்டு கணவரின் பிரிவால் நோயுற்ற நிலையில் மரணமானார்.
இதனால் அநாதரவாக நிர்க்கதியாக நின்ற பிள்ளைகளை வயதான காலத்திலும் பராமரித்து வந்த பேத்தியாரான கமலா (வயது 75) என்பவர் நோயுற்று கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிற்சை பலனின்றி நேற்று புதன்கிழமை இரவு உயிரிழந்துள்ளார்.
இரங்கல்
இந்நிலையில், அரசியல் கைதி ஆனந்தசுதாகரின் பிள்ளைகளைப் பராமரித்து வந்த பேத்தியாரான தேவதாஸ் கமலாவும் இறைவனடி சேர்ந்துவிட்டமை பெருந்துயரமே என குரலற்றவர்களின் குரல் அமைப்பு தெரிவித்துள்ளது.
அந்த அமைப்பு வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த இரங்கல் அறிக்கையில் மேலும்,
கிளிநொச்சி - மருதநகரைச் சேர்ந்த, அரசியல் கைதி ஆனந்தசுதாகரின் மனைவியின் தாயார் தேவதாஸ் கமலா, 19.11 2025 அன்று திடீர் சுகவீனம் காரணமாக இயற்கை எய்தியுள்ளார்.

இரண்டு பிள்ளைகளின் தந்தையான சச்சிதானந்தன் ஆனந்தசுதாகர் என்பவர், கடந்த 2008ஆம் ஆண்டு பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கடந்த 17 ஆண்டு காலங்களாக ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதியாக தென்னிலங்கை சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றார்.
அவ்வாறிருக்க, கணவரது ஆயுள் தண்டனைத் தீர்ப்பையும் அவரது நீண்ட பிரிவையும் தாங்க இயலாது நோயுற்ற அவரது துணைவியார், கடந்த 2018ஆம் ஆண்டு இயற்கை மரணம் எய்திவிட, பிள்ளைகளான பள்ளி செல்லும் பிஞ்சுகள் இரண்டும், தந்தையைப் பிரிந்து தாயையும் இழந்து நிர்க்கதி நிலையுற்று வாழ நிர்ப்பந்திக்கப்பட்டனர்.
தமிழ்ச் சமூகம்
அத்தருணத்தில், அவர்களது பேத்தியாரான கமலா, தனது இயலாமை மற்றும் முதுமை போன்றவற்றிற்கு மத்தியிலும் அந்தப் பிள்ளைகளை பார்த்துப் பராமரித்து வந்திருந்தார். இன்று, அந்தத் தாயாரும் உயிர் நீத்தமையானது, அந்தப் பிள்ளைகளின் மனதில் ஆறாத்துயரை ஏற்படுத்தியுள்ளது.
எவ்வாறாயினும், அந்த மூத்த தாயார் தனது இறுதி மூச்சுவரை இந்தப் பேரக்குழந்தைகளுக்காகவே தனது சுவாசத்தை அர்ப்பணித்திருந்தார் என்பது மனங்கொள்ளத்தக்கது.

இந்நிலையில், சமூக அக்கறை கொண்ட அந்தத் தாயாரின் ஆத்மா சாந்தியுற வேண்டுமாக இருந்தால், ஒட்டுமொத்த உறவுகளையும் இழந்து அவலம் சுமந்து வாழ்கின்ற இந்தப் பள்ளிப் பிஞ்சுகளின் தந்தையான, 'அரசியற் கைதி ஆனந்தசுதாகர்' விடுதலை பெற்று வீடுதிரும்பி, அந்த குழந்தைகளை அரவணைத்துப் பாதுகாப்பதற்கு தமிழ்ச் சமூகமாக நாம் வழிசமைக்க வேண்டும்.
அன்னாரது நல்லாத்மா பரமன் பதமடைய பிரார்த்திப்பதோடு, துயர் சுமந்து வாழும் பேரக்குழந்தைகளுக்கும், உற்றார் உறவினர்களுக்கும் தமிழ் அரசியல் கைதிகள் சார்பாக, 'குரலற்றவர்களின் குரல்' அமைப்பு, தனது ஆழ்ந்த அனுதாபங்ளை தெரிவித்துக்கொள்கிறது - எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலதிக தகவல் - தீபன்
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |