கனடாவில் இலங்கை தமிழ் மாணவி ஒருவரின் முன்மாதிரியான செயற்பாடு
இலங்கையிலிருந்து கனடாவுக்கு புலம்பெயர்ந்த ஒரு தம்பதியின் மகளான ஆஷ்னா (Aashna Nadarajah), புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகளுக்கு உதவும் வகையில், குறிப்பாக பெண்களுக்கு வருவாய் கிடைக்கும் வகையில் நல்ல முயற்சி ஒன்றைத் துவங்கியுள்ளார்.
ஆஷ்னாவின் பாட்டியார் 1980களில் இலங்கையிலிருந்து கனடாவுக்கு புலம்பெயர்ந்திருக்கிறார்.
அவர் முதுகலைப் பட்டம் பெற்றிருந்தும், ஏற்கனவே ஒரு ஆசிரியையாக இருந்தும்கூட, கனடாவில் நிலையான ஒரு வேலை கிடைக்க மிகவும் கஷ்டப்பட்டிருக்கிறார்.
மனத்திருப்தி இல்லாமல் ஏதேதோ வேலைகள் பார்க்கவேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கிறது அவருக்கு.
தனது பாட்டியின் கதையை பல முறை கேட்டிருந்த ஆஷ்னாவுக்கு, தானும் புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகளுக்கு உதவும் வகையில் ஏதாவது செய்யவேண்டும் என்ற எண்ணம் உருவாகியுள்ளது.
தற்போது Second Helpings என்ற பெயரில் தொண்டு நிறுவனம் ஒன்றைத் துவக்கியுள்ளார் ஆஷ்னா. அந்த அமைப்பு, புலம்பெயர்ந்த மற்றும் அகதிப் பெண்களுக்கு, அவர்கள் தங்களுக்குத் தெரிந்த உணவுப்பொருட்களைத் தயாரித்து விற்பனை செய்து அதன் மூலம் வருவாய் ஈட்ட உதவுகிறது.
இத்தனைக்கும் ஆஷ்னா இன்னமும் கல்வி பயிலும் ஒரு மாணவிதான். அவர் Huron High School என்ற பள்ளியில் பயின்று வருகிறார்.