மாவீரர் நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுத் தலைவரிடம் 8 மணிநேர விசாரணை: ஏற்பாட்டுக் குழு கண்டணம்
சம்பூர் மாவீரர் துயிலுமில்லத்துக்கான மாவீரர் நாள் நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவின் தலைவர் க.பண்பரசனிடம் பயங்கரவாத முறியடிப்பு மற்றும் விசாரணைப் பிரிவினர் எட்டு மணிநேர விசாரணை நடத்தியுள்ளனர்.
நேற்றைய தினம் (21.02.2023) காலை 8.30 தொடக்கம் மாலை 5.30 வரை விசாரணைகளை மேற்கொண்டு, அவரின் வாக்கு மூலத்தைப் பதிவு செய்ததன் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
சுமார் 8 மணிநேர விசாரணையை மேற்கொண்டமைக்கு மாவீரர் நாள் நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழு கண்டணம் தெரிவித்துள்ளது.
ஏற்பாட்டுக் குழு கண்டணம்
மேலும், இந்தச் செயற்பாடானது திருகோணமலையில் மாத்திரமே முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், ஏனைய பிரதேசங்களில் இவ்வாறான கெடுபிடிகள் நடைபெறவில்லை.
அரசியல் அமைப்பின் பிரகாரம் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட அனுமதியின் பிரகாரம் நடத்தப்பட்ட நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றுள்ளது.
ஐனநாயக உரிமை
இதனைத் தடுத்து நிறுத்துவதற்காகப் பாதுகாப்புத் தரப்பும், புலனாய்வாளர்களும் நவ.27ஆம் திகதி மாலை 5.30 மணிவரை மேற்கொண்ட பல்வேறு முயற்சிகள் பலனளிக்காத நிலையில், நினைவேந்தல் நிகழ்வுகள் நிறைவுற்ற பின்னரும் விசாரணைகளை மேற்கொள்வதானது இறந்தவர்களை நினைவு கூரும் ஐனநாயக உரிமையினையும் ஐனாதிபதிக்குள்ள அதிகாரங்களையும் கேள்விக்குட்படுத்துவதாக அமைந்துள்ளது.
இவ்வாறான செயற்பாடுகள் எமது மக்களின் மனோநிலையில் பாரிய
தாக்கத்தை ஏற்படுத்தும்.
அரசினது இச்செயற்பாட்டை தாம் வன்மையாகக் கண்டிப்பதாகவும் நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழு இன்று மாலை அறிவித்ததுடன் இச்செயற்பாடுகள் தொடர்பில் மனிதவுரிமைகள் ஆணைக்குழுவினை நாடவுள்ளதாகவும்
தெரிவித்துள்ளது.




