கல்முனையில் ஐவருக்கு எதிராக விதிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தடை நீக்கம்
அம்பாறை (Ampara) - கல்முனை பிரதேசத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு எதிராக ஐவருக்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவை நீக்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
குறித்த தீர்ப்பானது, இன்று (17.05.2024) கல்முனை (Kalmunai) நீதவான் நீதிமன்றத்தால் வழங்கப்பட்டுள்ளது.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் காரைதீவு பிரதேச தலைவர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளர் புஸ்பராஜ் துஷானந்தன், சமூகச் செயற்பாட்டாளர்களான தாமோதரம் பிரதீபன், விநாயகம் விமலநாதன் மற்றும் த.செல்வராணி ஆகியோருக்கே குறித்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
உறவுகளுக்கு அஞ்சலி
இதன்போது, கடந்த 15ஆம் திகதி முதல் எதிர்வரும் 19ஆம் திகதி வரையான காலப் பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நடத்த குறித்த ஐவருக்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், குறித்த வழக்கானது இன்று நீதிமன்றில் மீள் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது, பொதுமக்களுக்கு எவ்வித இடையூறின்றியும் விடுதலைப்புலிகளின் பதாகைகள் மற்றும் சின்னங்களைக் காட்சிப்படுத்தாமலும் மரணித்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தலாம் என நீதவானால் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்திலும் இவ்வாறு விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவு நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |