அனோஜனுக்காக சவூதியிடம் சர்வதேச மன்னிப்புச் சபை விடுத்துள்ள கோரிக்கை
மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அனோஜன் சிவராசாவுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை உடனடியாக ரத்து செய்யுமாறு சர்வதேச மன்னிப்புச் சபை சவூதி அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
முகநூல் கருத்தொன்றின் மூலம் மதநிந்தனை புரிந்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டு சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கருத்துச் சுதந்திரத்துக்கான உரிமையைப் பயன்படுத்தியதற்காகவே அனோஜன் மீது இக்குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக சர்வதேச மன்னிப்புச் சபை சுட்டிக்காட்டியுள்ளது.
நிபந்தனையின்றி விடுதலை செய்ய வலியுறுத்தல்
அவரை உடனடியாகவும் நிபந்தனையின்றியும் விடுதலை செய்ய வேண்டும் என மேலும் வலியுறுத்தியுள்ளது. நபிகள் நாயகத்தை அவமதிக்கும் வகையில் முகநூலில் கருத்துப் பதிவிட்டதாகக் கூறி, 2026 ஜூலை 1 ஆம் திகதி அனோஜன் சிவராசா கைது செய்யப்பட்டார்.
தான் ஆத்திரத்தில் இக்கருத்தைப் பதிவிட்டதாகவும், பின்னர் அதனை நீக்கிவிட்டு, வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கோரும் வீடியோவை வெளியிட்டதாகவும் அனோஜன் நீதிபதியிடம் தெரிவித்துள்ளார்.
ஜூலை 27 அன்று அல் அஹ்சா குற்றவியல் நீதிமன்றம் இணையவழி குற்றத் தடுப்புச் சட்டத்தின் கீழ் அவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 3 மில்லியன் சவூதி ரியால் அபராதமும் விதிக்கப்பட்டது.
எனினும், இரண்டு மாதங்களுக்கும் குறைவான காலத்தில், செப்டம்பர் 17 அன்று மேல்முறையீட்டு நீதிமன்றம் இத்தண்டனையை ஷரியா சட்டத்தின் கீழ் 'ஹத்' தண்டனையாக உயர்த்தி, அவருக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது. அனோஜன் இத்தீர்ப்பிற்கு எதிராக மேல்முறையீடு செய்துள்ளார்.
கைது செய்யப்பட்டது முதல் முதற்கட்ட தீர்ப்பு வழங்கப்படும் வரை அனோஜனுக்கு சட்டத்தரணியைச் சந்திக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டதாகவும் சர்வதேச மன்னிப்புச் சபை குற்றம் சாட்டியுள்ளது. சவூதி அரேபியாவின் குற்றவியல் நீதி முறைமை மற்றும் மரண தண்டனை பயன்பாடு குறித்து தீவிர கவலை வெளியிட்டுள்ளது.

சிறைத்தண்டனையையோ அல்லது மரண தண்டனையையோ
ஒருவர் தனது கருத்துக்களை வெளிப்படுத்தியதற்காக மட்டுமே சிறைத்தண்டனையையோ அல்லது மரண தண்டனையையோ எதிர்கொள்ளக்கூடாது என சுட்டிக்காட்டியுள்ளது.
அனோஜனின் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டால் அது தன்னிச்சையான உயிர் பறிப்பாகவே அமையும். சவூதி அதிகாரிகள் இத்தண்டனையை ரத்து செய்து, அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்," என சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.
சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தின்படி, திட்டமிட்டுக் கொலை செய்தல் போன்ற மிகக் கடுமையான குற்றங்களுக்கு மட்டுமே மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்பதை சுட்டிக்காட்டியுள்ள மன்னிப்புச் சபை, மரண தண்டனையை முற்றிலுமாக ஒழிப்பதற்கான முதற்படியாக தண்டனை நிறைவேற்றங்களை உடனடியாக நிறுத்தி வைக்குமாறு சவூதி அரேபியாவை வலியுறுத்தியுள்ளது.
சவூதி அரேபியா உலகில் அதிகளவு மரண தண்டனைகளை நிறைவேற்றும் நாடுகளில் ஒன்றாகத் திகழ்கிறது. 2026 அக்டோபர் 5 ஆம் திகதி வரையிலான தரவுகளின்படி, இந்த ஆண்டில் மட்டும் குறைந்தபட்சம் 175 பேருக்கு சவூதியில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதில் 20க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 94 வெளிநாட்டவர்கள் அடங்குவர். சவூதி அரேபியாவில் எழுதப்பட்ட தண்டனைச் சட்டம் இல்லாததால், நீதிபதிகளின் சொந்த ஷரியா விளக்கங்களின் அடிப்படையிலேயே பல தண்டனைகள் தீர்மானிக்கப்படுவதாகவும், கருத்துச் சுதந்திரத்தை ஒடுக்குவதற்கே இத்தகைய கடுமையான நடவடிக்கைகள் பயன்படுத்தப்படுவதாகவும் சர்வதேச மன்னிப்புச் சபை சுட்டிக்காட்டியுள்ளது.
ரூ.17.5 கோடி வீட்டின் பால்கனியில் விவசாயம் செய்யும் நடிகர் மாதவன் - நீங்களும் செய்ய 5 எளிய வழிகள் இதோ! Manithan
காலையில் வெறும் வயிற்றில் 2 பேரீச்சம்பழங்கள் - உடலில் நடக்கும் மாற்றங்கள் என்னென்ன தெரியுமா? Manithan
28 ஆண்டுகள், 29 நாடுகள், 50,000 கி.மீ நடைபயணம்- பிரித்தானியாவிற்கு திரும்பிய சாகச வீரர் News Lankasri