மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் எம்.பிக்கு பொது மன்னிப்பு! - சர்ச்சையாவது ஏன்?
இலங்கையில் கடந்த பூரணை தினத்தை முன்னிட்டு, 94 கைதிகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் வழங்கப்பட்ட பொதுமன்னிப்பு, இன்று சர்வதேச ரீதியில் பேசுப் பொருளாக மாறியுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்த 16 தமிழ் அரசியல் கைதிகள் உள்ளடங்களாக இந்த 94 பேருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கப்பட்டிருந்தது.
இவ்வாறு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டவர்களில், கொலை சம்பவமொன்று தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவும் உள்ளடங்கியமை, பாரிய சர்ச்சையை தோற்றுவித்துள்ளது.
துமிந்த சில்வாவை விடுதலை செய்வதற்காகவே, தமிழ் அரசியல் கைதிகளும் ஜனாதிபதியினால் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகின்றது.
இந்தநிலையில், ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள், துமிந்த சில்வாவின் விடுதலை தொடர்பில் தமது பக்க நியாயத்தை வெளிப்படுத்தியுள்ள போதிலும், ஜனாதிபதி நேற்று (25) நாட்டு மக்களுக்கு நிகழ்த்தி விசேட உரையில் கூட இது குறித்து கருத்து வெளியிடவில்லை.
யார் இந்த துமிந்த சில்வா?
கொழும்பு மாவட்டத்தில் 2010ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு, நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவாகியிருந்தார். இலங்கையின் பிரபல நிறுவனமான ஏ.பி.சி வலையமைப்பின் உரிமையாளரான ரெயினோ சில்வாவின் சகோதரரே, இந்த துமிந்த சில்வா.
இவ்வாறான நிலையில், இலங்கையின் பிரபல அரசியல்வாதியான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமசந்திரவிற்கும், துமிந்த சில்வாவிற்கும் இடையில் 2011ம் ஆண்டு இடம்பெற்ற பரஸ்பர துப்பாக்கி பிரயோகத்தில், பாரத லக்ஷ்மன் பிரேமசந்திர உள்ளிட்ட நால்வர் உயிரிழந்திருந்தனர்.
இந்த சம்பவத்தில் துமிந்த சில்வாவின் தலையில் காயம் ஏற்பட்டு, வெளிநாட்டு சிகிச்சைகளின் ஊடாக அவர் குணமடைந்திருந்தார்.
இவ்வாறான நிலையில், இந்த கொலை தொடர்பிலான வழக்கில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட துமிந்த சில்வாவிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
இவ்வாறு பாரதூர குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்ட துமிந்த சில்வா, தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளமை, உள்நாட்டில் மாத்திரமன்றி, சர்வதேச ரீதியிலும் பாரிய சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது.
அமெரிக்கா, ஐக்கிய நாடுகள் எதிர்ப்பது ஏன்?
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டதை தாம் வரவேற்பதாக அமெரிக்காவிற்கான இலங்கை தூதுவர், ட்விட்டர் பதிவொன்றின் ஊடாக தெரிவித்துள்ளார்.
எனினும், 2018ம் ஆண்டு உயர்நீதிமன்றத்தினால் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டு, தண்டனை வழங்கப்பட்ட துமிந்த சில்வாவிற்கு பொதுமன்னிப்பு வழங்கியமைனாது, சட்ட ஆதிக்கத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக அவர் தமது பதிவில் கூறியுள்ளார்.
அரசியல்வாதியின் கொலை தொடர்பில் தண்டனை பெற்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவிற்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கப்பட்டமையானது, இலங்கையின் தன்னிச்சையான செயற்பாட்டுக்கு மற்றுமொரு எடுத்துக்காட்டு எனவும், இது சட்டத்தின் ஆட்சியை பலவீனப்படுத்துவதுடன், இலங்கையின் பொறுப்புக்கூறலை கேள்விக்கு உட்படுத்தும் எனவும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவை தெரிவித்துள்ளது.
பாரத லக்ஷ்மன் பிரேமசந்திரவின் மகளாக ஹிருணிகா பிரேமசந்திர எதிர்ப்பு
ஒரே நாடு ஒரே சட்டம் என ஜனாதிபதி கூறிய கருத்தானது, தேர்தல் காலத்துடன் வரையறுக்கப்பட்டுள்ளதாக கொலை செய்யப்பட்ட பாரத லக்ஷ்மன் பிரேமசந்திரவின் மகளான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதிக்கு ஐந்து பக்கங்களை கொண்ட கடிதமொன்றின் ஊடாக அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தமது தந்தையின் மரண வீட்டிற்கு அனைத்து அரசியல்வாதிகளும் வருகைத் தந்ததாக கூறிய அவர், தற்போதைய ஜனாதிபதியான கோட்டாபய ராஜபக்ச தமது தந்தையின் இறுதிக் கிரியைகளின் ஊடாக கலந்துக்கொள்ளவில்லை என தெரிவித்துள்ளார்.
அந்த சந்தர்ப்பத்தில் காயமடைந்திருந்த துமிந்த சில்வாவுடன், ஸ்ரீஜயவர்தனபுர வைத்தியசாலையில் தற்போதைய ஜனாதிபதி இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
ஒரே நாடு, ஒரே சட்டம் என்ற தொனிப்பொருளை அடிப்படையாகக் கொண்டு, தற்போது மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள கைதிகள் பொதுமன்னிப்பை கோரினால், உங்களால் வழங்காது இருக்க முடியாது என, ஹிருணிகா, ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு குற்றவாளிகளை விடுதலை செய்வது என்றால், சிறைச்சாலைகள் எதற்கு? சட்டம் எதற்கு? நீதிபதிகள் எதற்கு? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
துமிந்த சில்வாவிற்கு, பௌத்த தர்மத்திற்கு அமைய, தான் மன்னிப்பு வழங்கி விட்டதாக ஹிருணிகா பிரேமசந்திர, ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
துமிந்த சில்வாவிற்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டமைக்கு, பிரதான எதிர்க் கட்சியாக ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட அனைத்து எதிர்க் கட்சிகளும் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.
ஆளும் கட்சி என்ன சொல்கிறது?
கடந்த ஆட்சியாளர்கள் துமிந்த சில்வாவை திட்டமிட்டு, சிறைக்கு அனுப்பியதாக ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவிக்கின்றது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் இந்த தீர்மானத்தை வரவேற்றுள்ளனர்.
அரசியல் பழிவாங்கல் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஊடாக விசாரணைகளை நடத்தி, அதனூடாக கிடைக்க பெறுபேறுகளை அடிப்படையாகக் கொணடே துமிந்த சில்வா விடுதலை செய்யப்பட்டதாக போக்குவரத்து அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

ரபேல் போர் விமானத்திற்கு பின்னடைவா? பங்கு சந்தையில் முந்தும் சீனாவின் J-10 போர் விமானம் News Lankasri

தாஸ் படத்தில் ரவி மோகன் ஜோடியாக நடித்த நடிகையை நினைவு இருக்கா! இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா Cineulagam

வெடிமருந்துகளை அகற்றும்போது ஏற்பட்ட வெடிப்பு விபத்து: ராணுவ வீரர்கள் உட்பட 13 பேர் பலி! News Lankasri

Brain Teaser Maths: இடது மூளை ஆற்றல் கொண்டவரால் மட்டுமே புதிரை தீர்க்க முடியும் உங்களால் முடியுமா? Manithan
