அமெரிக்க முதலீட்டாளர்களை அச்சப்பட வைக்கும் இலங்கை அரசாங்கம்!
இலங்கை அரசாங்கத்தின் ஒருசில செயற்பாடுகள் காரணமாக இலங்கையில் முதலீடு செய்வது தொடர்பில் அமெரிக்க முதலீட்டாளர்கள் தயக்கம் கொண்டுள்ளதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
2025ஆம் ஆண்டுக்கான உலகளாவிய முதலீட்டு வாய்ப்புகள் குறித்த அறிக்கையொன்றை அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையிலேயே மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அரசாங்கத்துறையின் வெளிப்படைத் தன்மையற்ற போக்கு, சட்டதிட்டங்களின் தெளிவின்மை, அதிகாரிகள் ஆதிக்கம் என்பன அதற்கான காரணங்களாக இருப்பதாகவும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கம்யூனிச சித்தாந்தங்கள்
தகவல் தொழில்நுட்பம், மின்சக்தி மற்றும் விமான சேவைகள் போன்ற துறைகளில் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள அமெரிக்க முதலீட்டாளர்கள் ஆர்வம் கொண்டுள்ளனர்.
ஆயினும் திடீரென்று மாற்றமடையும் சட்டதிட்டங்கள், தெளிவற்ற கொள்முதல் நடைமுறைகள், அனுமதி வழங்குவதில் இழுத்தடிப்பு போன்ற காரணங்களினால் அமெரிக்க முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள தயக்கம் காட்டுகின்றனர்.
அத்துடன், தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முன்னைய கால மேற்கத்தேய எதிர்ப்பு நிலைப்பாடுகள், கம்யூனிச சித்தாந்தங்கள் என்பன காரணமாக முதலீட்டாளர்கள் மத்தியில் ஒரு அச்சம் நிலவுகின்றது. இவ்வாறான நிலைமைகள் சீராக்கப்படவில்லை என்றால் முதலீட்டாளர்களை ஈர்ப்பதில் சிக்கல் ஏற்படலாம்.
அவ்வாறான நிலைமைகளில் பொருளாதார வளர்ச்சியை எதிர்பார்க்கவும் முடியாது என்றும் குறித்த அறிக்கையில் தொடர்ந்தும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



