குற்றவாளிகளை வீட்டுக்காவலில் வைப்பதற்கான சட்டத்திருத்தம்
சிறிய குற்றங்களுக்காக தண்டனை பெறும் குற்றவாளிகளை சிறையில் அடைப்பதற்கு பதிலாக பெற்றோர் அல்லது பாதுகாவலர்களின் பொறுப்பின் கீழ் சில மாதங்கள் வீட்டுக்காவலில் வைப்பதற்கான சட்டத்தை கொண்டு வர நீதியமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
சிறிய குற்றங்களுக்காக சிறைக்கு செல்லும் நபர்கள் பயங்கர குற்றவாளிகளாக மாறி வெளியில் வருகின்றனர்
சிறிய குற்றங்களுக்காக சிறைக்கு செல்லும் நபர்கள், சிறையில் பல்வேறு நபர்களுடன் பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டு பயங்கரமான குற்றவாளிகளாக மாறி வெளியில் வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளதால், புதிய சட்டத்தின் ஊடாக இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த தீர்மானித்துள்ளதாக நீதி, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளவர்களின் உற்பத்தி திறனை வெளிப்படுத்தும் நோக்கில் பத்தரமுல்லை தியத்த உயன பிரதேசத்தில் நேற்று நடத்தப்பட்ட கண்காட்சியில் பிரதம அதிதியாக கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார்.
சடடம் கொண்டு வந்த பின்னர் குற்றவாளிகளை வீட்டுக்காவலில் வைக்க நீதவான் உத்தரவிட முடியும்
இது சம்பந்தமான சட்டம் கொண்டு வரப்பட்ட பின்னர், நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படும் சந்தேக நபர்களை சிறையில் அடைக்காது, மூன்று,நான்கு மாதங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட காலம் பெற்றோர் உட்பட பாதுகாவலர்களின் பொறுப்பின் கீழ் வீட்டுக்காவலில் வைக்குமாறு நீதவான்களுக்கு உத்தரவிட முடியும்.
இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் சட்ட மறுசீரமைப்புகளை மேற்கொள்வதற்காக சட்டத்தரணிகள் சங்கம் உட்பட சம்பந்தப்பட்ட நிபுணர்களுடன் எதிர்காலத்தில் பேச்சுவார்த்தை நடத்த எதிர்பார்த்துள்ளேன்.
போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள் உட்பட முதல் முறையாக சிறிய குற்றங்களுடன் சம்பந்தப்பட்ட நபர்களை இவ்வாறு பாதுகாவலர்களின் பொறுப்பின் கீழ் வீட்டுக்காவலில் வைக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் விஜயதாச ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.



