அரசியலமைப்புத் திருத்தம் பொதுமக்களின் அபிலாசைகளை பூர்த்தி செய்யாது: நிமல் புஞ்சிஹேவா
அரசியலமைப்பின் உத்தேச 21 வது திருத்தச் சட்டம் தற்போது நிறைவேற்றப்படுவதால் பொதுமக்களின் எந்தவொரு அபிலாசையையும் பூர்த்தி செய்யாது என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தென்னிலங்கை ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
முன்வைக்கப்பட்டுள்ள அரசியலமைப்புத் திருத்தச் சட்டம்
தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ள அவர், முன்வைக்கப்பட்டுள்ள அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் பொதுமக்களின் எந்தவொரு அபிலாசையையும் பூர்த்தி செய்யக் கூடியதல்ல.
தற்போதைய நிலையில் தேர்தல் ஒன்று நடத்தப்பட்டு புதிய அரசாங்கமொன்று அமைந்த பின்னர் அரசியலமைப்பு முழுமையாகத் திருத்தப்பட்டு புதிய யாப்பு உருவாக்கப்பட வேண்டும். அப்போதுதான் பொதுமக்களின் அபிலாசைகள் பூர்த்தி செய்யப்படும்.
ஆனாலும் தேர்தல் ஒன்றை நடத்துவதற்கு 1000 கோடி ரூபாவுக்கும் மேலதிகமான தொகை செலவிடப்பட வேண்டியிருக்கும். நாடு தற்போதைக்கு எதிர்கொண்டுள்ள நெருக்கடி நிலையில் அது சாத்தியப்படாது.
எனவே தற்போதைக்கு அடுத்த தேர்தலின் மூலம் பெண்கள், இளைஞர்கள் போன்றோரின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்கான வழிகளை மேற்கொள்ளுமாறு சகல அரசியல் கட்சிகளின் செயலாளர்களிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளோம்.
மேலும் அடுத்த தேர்தலின் பின் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்பது தொடர்பில் இணக்கப்பாடு ஒன்றை ஏற்படுத்திக் கொள்ளவும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம் என்றும் சட்டத்தரணி புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.