மட்டக்களப்பில் நோயாளர் காவு வண்டி - பேருந்து மோதி பாரிய விபத்து
மட்டக்களப்பு (Batticaloa) கல்முனை பிரதான வீதியின் செட்டிபாளையத்தில் இன்று (17.12.2024) காலை பாரிய விபத்துச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இதில் 3 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
களுவாஞ்சிக்குடியில் நடைபெறவுள்ள கூட்டம்
விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, மட்டக்களப்பிலிருந்து களுவாஞ்சிக்குடி நோக்கி சென்று கொண்டிருந்த நோயாளர் காவு வண்டி (அம்பியுலன்ஸ்) அதே திசையில் எதிரே சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தில் மோதியுள்ளது.
விபத்துச் சம்பவத்தில் இரு வாகனங்களிலும் பயணித்தவர்கள் உயிர் தப்பியுள்ளதுடன், நோயாளர் காவு வண்டியில் (அம்பியுலன்ஸ்) பயணித்த சாரதி உட்பட முன்று பேர் காயமடைந்து களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.
குறித்த நோயாளர்காவு வண்டியில் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையிலிருந்து புறப்பட்டு, களுவாஞ்சிக்குடியில் நடைபெறவுள்ள கூட்டம் ஒன்றுக்காக சென்ற வேளையிலேயே இவ்விபத்துச் சம்பவித்துள்ளதாக தெரியவருகின்றது.
போக்குவரத்து பொலிஸார் விசாரணை
பேருந்தில் பயணித்த பிரயாணிகள் எவருக்கும் எதுவித சேதமும் ஏற்படாத நிலையில், நோயாளர் காவு வண்டியில் பயணித்த சாரதி, விசேட தாதிய பரிபாலகி மற்றும் பொது சுகாதார பரிசோதகர் ஒருவருமாக மூன்று பேர் இதில் காயமடைந்துள்ளனர்.
இந்நிலையில், நோயாளர் காவு வண்டியின் முன்பகுதிக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதுடன், பேருந்தின் பின் பகுதியிலும் சேதம் ஏற்பட்டுள்ளது.
இவ்விடயம் அறிந்த களுவாஞ்சிக்குடி போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |