ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இடைக்கால அறிக்கை தொடர்பில் அம்பிகா சற்குணநாதன் அதிருப்தி
பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பிலான அடிப்படைப் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கும் வகையில் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகள் அமையவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
மனித உரிமைகள் விவகாரங்கள் தொடர்பில் கடந்த காலங்களில் நிறுவப்பட்ட ஆணைக்குழுக்கள் மற்றும் குழுக்களின் பரிந்துரைகளை மீளாய்வு செய்யும் நோக்கில் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவினால் விசேட ஆணைக்குழுவொன்று நிறுவப்பட்டிருந்தது.
இந்த ஆணைக்குழுவினால் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்க்பபட்டுள்ள இடைக்கால அறிக்கை தொடர்பில் அம்பிகா சற்குணநாதன் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
குறிப்பாக பயங்கரவாத தடைச் சட்டத்தின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் இந்த ஆணைக்குழுவின் பரிந்துரைகள் அமையப்பெறவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தினை ஜனநாயக ரீதியானது என வலிறுயுத்தும் வகையில் ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கை அமைந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மூன்று மாதங்களுக்கு மேல் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு எதிராக குற்றப் பதிவு செய்து விசாரணைகளை முடிவுறுத்த வேண்டுமென பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் சித்திரவதைக்கு உட்படுத்தி ஒப்புதல் வாக்குமூலங்கள் பெற்றுக்கொள்ளக் கூடிய சாத்தியம் உண்டு எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்கள் சித்திரவதக்கு உட்படுத்தப்படக்கூடிய சாத்தியங்கள் தொடர்ந்தும் நீடிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
நபர்களுக்கு எதிராக தடை உத்தரவுகளை பிறப்பிக்க பாதுகாப்பு அமைச்சருக்கு அனுமதி வழங்கும் வகையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடுவதனை தடை செய்தல், மேடைகளில் பேசுவதனை தடை செய்தல் உள்ளிட்ட பல்வேறு தடைகளை பாதுகாப்பு அமைச்சரினால் பிறப்பிக்க முடியும் என தெரிவித்துள்ளார்.
அம்பிகா சற்குணநாதன் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த விடயங்களை சுட்டிக்காட்டியுள்ளார்.