பிரித்தானியாவில் 30 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மாற்று கோவிட் தடுப்பூசி! - வெளியாகியுள்ள தகவல்
பிரித்தானியாவில் 30 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு அஸ்ட்ராசெனெகா கோவிட் - 19 தடுப்பூசிக்கு பதிலாக மாற்று கோவிட் தடுப்பூசி வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அஸ்ட்ராசெனெகா தடுப்பூசி பெற்றுக்கொண்ட சிலருக்கு ஏற்பட்டுள்ள அரிதான இரத்த உறைவு காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிரித்தானியாவில் மார்ச் மாத இறுதிக்குள் கோவிட் - 19 தடுப்பூசி பெற்றுக்கொண்ட 79 பேர் இரத்த உறைவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 19 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய மருத்துவ கண்காணிப்பு குழு (MHRA) இதனை தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், இரத்த உறைவுக்கு கோவிட் - 19 தடுப்பூசி காரணம் என்பதற்கான சான்று அல்லவெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, மருந்துகள் மற்றும் சுகாதார ஒழுங்குமுறை நிறுவனம் (MHRA) பின்வரும் மதிப்பாய்வுகளை கண்டறிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 20 மில்லியன் டோஸ் செலுத்தப்பட்ட பின்னரே 79 பேருக்கு இரத்த உறைவு ஏற்பட்டுள்ளது, அதில் 19 பேர் உயிரிழந்துள்ளனர். இரத்த உறைவு உருவாகியதில் ஒரு மில்லியனில் நான்கு பேருக்கும், ஒரு மில்லியனில் ஒருவர் இறக்கும் அபாயத்தையும் தருகிறது.
- அரிதான இரத்த உறைவினால் பாதிக்கப்பட்டவர்களில் மூன்றில் இரண்டு பங்கு பெண்கள் அடங்குகின்றனர்.
- உயிரிழந்தவர்கள் 18 முதல் 79 வயதுக்குட்பட்டவர்கள், அவர்களில் மூன்று பேர் 30 வயதிற்குட்பட்டவர்கள்.
- பதிவுசெய்யப்பட்ட அனைத்து சம்பவங்களும் முதல் டோஸ் செலுத்தப்பட்ட பின்னர் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், தடுப்பூசி மற்றும் இரத்த உறைவு ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பு "நம்பத்தகுந்ததாக" இருந்தது, எனினும் உறுதிப்படுத்தப்படவில்லை என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
அத்துடன், உலகெங்கிலும் கோவிட் - 19 தடுப்பூசி பெற்ற சுமார் 200 மில்லியன் மக்களிடையே இரத்தம் உறைதல் சம்பவங்கள் "மிகவும் அரிதானவையாக” இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இதேவேளை, அஸ்ட்ராசெனெகா கோவிட் - 19 தடுப்பூசியை குழந்தைகளுக்கு செலுத்தி பரிசோதனை செய்வதை அதனை தயாரித்துள்ள ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.
ஐரோப்பிய நாடுகளில் தடுப்பூசியை செலுத்திக் கொண்ட, வயது வந்தவர்களில் சிலர் இரத்தம் உறைதலால் பாதிக்கப்பட்ட நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் பிரித்தானிய மருத்துவம் மற்றும் சுகாதாரப் பொருட்கள் ஒழுங்குமுறை ஆணையத்திடம் கூடுதல் தரவுகளை கேட்டிருப்பதாகவும், அதன் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஒக்ஸ்போர்ட் தெரிவித்துள்ளது.