இராணுவ சிப்பாய்களின் பெற்றோருக்கான மாதாந்த கொடுப்பனவு இடைநிறுத்தம் - பாதுகாப்பு அமைச்சின் அறிவிப்பு
சேவையில் இருந்தபோது அங்கவீனமடைந்த இராணுவ சிப்பாய்களின் பெற்றோருக்கான மாதாந்த கொடுப்பனவு, 17000 பயனாளிகளுக்குத் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
பயனாளிகள் இன்னும் உயிருடன் இருக்கிறார்கள் என்பதை உறுதிப்படுத்தும் சான்றிதழ்களை சமர்ப்பிக்கத் தவறியமையே இந்த இடைநிறுத்தத்திற்கான காரணம் என இராணுவ சேவை அதிகாரசபை தெரிவித்துள்ளது.
உறுதிப்படுத்தப்பட்ட சான்றிதழ்
பாதிக்கப்பட்ட பெற்றோர்கள் தமது கொடுப்பனவுகளை மீண்டும் பெற, கிராம உத்தியோகத்தரால் உறுதிப்படுத்தப்பட்ட சான்றிதழை சமர்ப்பிப்பதன் மூலம் தகுதிப்பாட்டை உறுதிப்படுத்தலாம்.

இந்தச் சான்றிதழை சமர்ப்பிப்பதற்கான இறுதித் திகதி 2026ஆம் ஆண்டு பெப்ரவரி 28 ஆகும். கொடுப்பனவுகளைத் தொடர்ந்து பெறுவதற்கு, குறித்த காலக்கெடுவுக்குள் சான்றிதழைச் சமர்ப்பிப்பது கட்டாயமானது என அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
தகுதி பெற்றுள்ளவர்கள்
தற்போது, இந்த மாதாந்த கொடுப்பனவு ரூபா 750 ஆக உள்ளதோடு, மொத்தம் 32,867 நபர்கள் இந்தக் கொடுப்பனவைப் பெறத் தகுதி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |