12 மணிநேர மின்வெட்டுக்கு அனுமதி! அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு
எரிபொருள் மற்றும் மின்சாரத்திற்கு வழங்கப்படும் மானியங்களை நிறுத்த வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியம் தொடர்ந்து கூறுகிறது. எனக்குத் தெரிந்தவரை, இவை சர்வதேச நாணய நிதியம் பணியாளர் நிலை ஒப்பந்தத்தில் உள்ளது. எனவே, சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து சில சலுகைகளைப் பெறுவதற்கு நாம் அதைக் கடைப்பிடிக்க வேண்டும் என அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து சில சலுகைகளைப் பெறுவதற்கு சில அறிவுறுத்தல்களை நாங்கள் கடைப்பிடிக்க வேண்டிய நிலை உள்ளது.
மின்வெட்டுக்கு அனுமதி
மறுபுறம், இந்த மானியம் வழங்கும் பொருளாதாரத்தை எப்போதும் தொடர முடியாது. எங்களிடம் இலவசக் கல்வி, 1.7 மில்லியன் மக்களுக்கான சமுர்த்தி சலுகை, மானிய விலையில் மின்சாரம், எரிபொருள் மற்றும் நீர் விநியோகம் என்பன மானியத்தின் கீழ் உள்ளன.
இருப்பினும், இது நாட்டுக்கு எந்த நன்மையையும் செய்யாது. நாங்கள் கடந்த 75 ஆண்டுகளாக இந்த முறையைக் கடைப்பிடித்து வருகின்றோம். இது கல்வி போன்ற சில துறைகளில் வழிவகுத்திருந்தாலும் செலவுகளை அரசாங்கத்தினால் தாங்க முடியாதுள்ளது. அதனால்தான் செலவு பிரதிபலிப்பு விலை நிர்ணய உத்தியை நாம் பின்பற்ற வேண்டும். அதைத்தான் நாங்கள் செய்கிறோம்.
செலவு பிரதிபலிப்பு விலைச்சூத்திரம் ஒரு கட்டாயத் தேவை. அந்த விலைச்சூத்திரத்தைப் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு மற்றும் இலங்கை மின்சார சபை இணைந்து உருவாக்க வேண்டும். சரியான கணக்கீடு என்ன என்பதை அவர்கள்தான் முடிவு செய்து இறுதி செய்ய வேண்டும்.
மறுபுறம், புதிய மின்உற்பத்தித் திட்டங்கள் வரவிருப்பதால், மின்உற்பத்திச் செலவைக் குறைப்பதை உறுதி செய்ய பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு கடமைப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் அவர்கள் அதைச் செய்யவில்லை. நாட்டில் 12 மணி நேரத்திற்கும் மேலாக மின்வெட்டு நடைமுறைப்படுத்தவும் அவர்கள் அனுமதி வழங்கினர். இருந்தாலும் அதனை நடைமுறைப்படுத்தவில்லை.
மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் நுகர்வோருக்கு 24 மணி நேர தடையில்லா மின்சாரம் வழங்குவதற்கு தன்னால் முடிந்த அளவு முயற்சி செய்து கொண்டிருக்கும் போது பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு கைகோர்த்துள்ளது, இது சரியான செயல் அல்ல.
பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு இப்போது அரசியல் உள்நோக்கம் கொண்ட பிரபல்யம் தேடும் நிறுவனமாக மாறியுள்ளது மற்றும் அதன் தலைவர் நாட்டுக்கும் அதன் மக்களுக்கும் நன்மை பயக்கும் வகையில் செயல்படவில்லை என்று நான் நினைக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.