பத்தரமுல்லை நகரில் ஒதுக்கப்படும் காணி! எடுக்கப்படவுள்ள இறுதி தீர்மானம்
பேருந்து நிலையமொன்றை அமைப்பதற்கு, பத்தரமுல்லை நகரில் காணி ஒதுக்கும் நடவடிக்கையை நிறைவு செய்வதற்கான இறுதி தீர்மானத்தை எடுப்பதற்கு நகர அபிவிருத்தி அதிகார சபை உள்ளிட்ட சம்பந்தப்பட்ட தரப்பினரை எதிர்வரும் நாடாளுமன்ற அமர்வு வாரத்தில் அழைப்பதாக வலுசக்தி மற்றும் போக்குவரத்து பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் நாலக பண்டார கோட்டேகொட தெரிவித்துள்ளார்.
கொழும்பு கோட்டை பகுதியில் காணி
அதேபோன்று, இது தொடர்பில் எதிர்கால நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், கொழும்பு பிரதான பேருந்து நிலையத்தில், பேருந்துகளை அடுத்த பயண நேரம் வரும்வரை நிறுத்துவதற்கு கொழும்பு கோட்டைப் பகுதியில் பொருத்தமான காணியொன்றை ஒதுக்கும் நடவடிக்கையை விரைவு படுத்துவதற்கும் நாடாளுமன்ற உறுப்பினர் யதாமினி குணவர்தன தலைமையில் உப குழுவொன்றை நியமிப்பதற்கும் இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பத்தரமுல்லை நகரில் பேருந்து நிலையமொன்றை அமைக்குமாறு இதற்கு முன்னர் இந்தக் குழுவுக்கு அழைக்கப்பட்டிருந்த நகர அபிவிருத்தி அதிகாரசபையின் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டிருந்தாலும், அது தொடர்பில் செயற்படாமை குறித்து அதிகார சபைக்கு குழு கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியது.
அத்துடன், இலங்கை போக்குவரத்து சபையின் பல நிர்வாக சிக்கல்கள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
தரம் 8 சித்தியடைந்தவர்கள் டிப்போ முகாமையாளர்களாக உள்ளமை, கணக்கியல், தொழிநுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் காணப்படும் பதவிகளில் சிக்கல் நிலைமை காணப்படுகின்றமை இதன்போது புலப்பட்டுள்ளது.
தேர்தலை அடுத்து தகுதியற்ற ஒரு சில தொழிற்சங்கத் தலைவர்கள் டிப்போ முகாமைத்துவம் உள்ளிட்ட உயர் பதவிகளுக்கு வருவதால், அரசியல் தலையீடுகளிலிருந்து விடுபடுவதன் அவசியம் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது. தற்போதைய சிக்கல்களில் சாரதிகள் மற்றும் நடத்துனர்களின் பற்றாக்குறை பிரதானமானது என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தற்போது 26,561 பேர் கொண்ட முழு பணியாளர்கள் உள்ளமையும், சாரதிகள் மற்றும் நடத்துனர்களின் 800 வெற்றிடங்கள் காணப்படுவதும் புலப்பட்டுள்ளது.
ஆட்சேர்ப்புகளை மேற்கொள்ள நடவடிக்கை
அதற்கமைய, அரசாங்கத்தின் அனுமதியுடன் இந்த ஆட்சேர்ப்புகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன், நாடு முழுவது 107 டிப்போக்களில் பல்வேறு தவறான நடத்தைகள் காரணமாக குற்றஞ்சாட்டப்பட்ட நடத்துனர்கள் சுமார் 500 பேர் காணப்படுவதாகவும் விசாரணைகள் நிறைவடையும் வரை அவர்களுக்கு சம்பளம் வழங்கவேண்டி ஏற்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும், எரிபொருள் பயன்பாடு மற்றும் முகாமைத்துவம் குறித்த அறிக்கையை குழுவுக்கு வழங்குமாறும் அவர் அறிவுறுத்தினார்.

ரஜினி, கமல் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்துகொண்ட ஐசரி கே கணேஷ் மகள் திருமணம்.. புகைப்படங்கள் இதோ Cineulagam
