5G அலைக்கற்றை ஏலத்திற்கான இறுதி ஒதுக்கீட்டு அறிவித்தலை வெளியிட்ட அரசாங்கம்
நாட்டின் டிஜிட்டல் உட்கட்டமைப்பை விரிவுபடுத்தும் முக்கிய படியாக, 2025 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள 5G அலைக்கற்றை ஏலத்திற்கான இறுதி ஒதுக்கீட்டு அறிவித்தலை(Final Assignment Notice) இலங்கை அரசாங்கம் வெளியிட்டுள்ளது.
தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்தில்(ICTA) இன்று(03.10.2025) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில், டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன, டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் பதில் செயலாளரும் இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின்(TRCSL) தலைவருமான வருண ஸ்ரீ தனபால உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர்.
டிஜிட்டல் உட்கட்டமைப்பு
நிகழ்வில் உரையாற்றிய பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன, இந்த இறுதி அலைக்கற்றை ஒதுக்கீடு, அடுத்த தலைமுறை தொலைத்தொடர்பு சேவைகளை விரிவுபடுத்துவதற்கு ஒரு வலுவான அடித்தளத்தை வழங்கும் என்றும், 5G தொழில்நுட்பமானது பொருளாதார வளர்ச்சி, புத்தாக்கம் மற்றும் தொழில்துறை மேம்பாட்டுக்கான சக்தியாக அமையும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அதிவேக, குறைந்த தாமத நேர இணையம்(low-latency internet) மற்றும் மேம்பட்ட டிஜிட்டல் உட்கட்டமைப்பு ஆகியவை சுகாதாரம், கல்வி, விவசாயம் மற்றும் ஆடை உற்பத்தி உள்ளிட்ட பல துறைகளில் மாற்றத்தை ஏற்படுத்தும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



