கல்விக்கான ஒதுக்கீடு போதுமானது அல்ல! - கஜேந்திரகுமார் எம்.பி. விசனம்
'கல்விக்காக 6 சதவீதத்தை ஒதுக்குவதற்குக் கடந்த காலங்களில் போராடினோம். ஆனால் தற்போது கல்விக்கு 1.3 சதவீதமே ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகை போதுமானது அல்ல என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற 2026 வரவு - செலவுத் திட்டத்தின் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றுகையில்,
''யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் கல்விசாரா ஊழியர்களில் 327 வெற்றிடங்கள் கடந்த காலங்களில் நிலவின. அவற்றில் தற்போதைய அரசு ஆட்சிக்கு வந்த பின்னர் பல்வேறு அழுத்தங்களுடன் 170 வெற்றிடங்கள் பூரணப்படுத்தப்பட்டுள்ளன.
கடந்த 10 வருடங்களாக 6 புதிய பீடங்கள் இயங்கின. ஊழியர் வெற்றிடங்கள் நிரப்பப்படாமலேயே அவை இயங்கின. இந்நிலையில் இப்போது 170 பேர் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் எஞ்சிய தொகையையும் நிரப்ப வேண்டும் என்று நாங்கள் கோருகின்றோம். அவசர விடயமாக இதனைக் கவனத்தில்கொள்ள வேண்டும். ஆசிரியர் - அதிபர் சேவையின் சம்பள மறுசீரமைப்பு விடயத்தில் பெரும் முறைப்பாடுகள் காணப்படுகின்றன.

சுபோதினி குழுவுக்கு ஆதரவு
தேசிய மக்கள் சக்தி எதிர்க்கட்சியில் இருந்த போது சுபோதினி குழுவுக்கு ஆதரவாகவே பேசியுள்ளீர்கள். ஆனால் நீங்கள் வந்த பின்னர் திருத்தங்களை மேற்கொண்டுள்ளீர்கள். இது போதுமானது அல்ல.
கல்வி என்பது நாட்டில் அடிப்படையானது. முன்னுரிமை வழங்க வேண்டிய பிரிவுகளில் கல்வி, சுகாதாரம் என்பன உள்ளன. இவற்றுக்கு முன்னுரிமை வழங்காவிட்டால் நாடு தோல்வி கண்டதாகவே இருக்கும். இதனால் இந்த அரசு இந்தச் சம்பளப் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும்.
கல்விக்காக 6 சதவீதத்தை ஒதுக்குவதற்காக நாங்களும் உங்களுடன் போராடினோம். ஆனால் இப்போது 1.3 சதவீதமே ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்தத் தொகை போதுமானது அல்ல. இந்த விடயத்தில் நீங்கள் நல்ல தீர்மானங்களை எடுக்கும் போது நிபந்தனைகளின்றி அரசுக்கு உதவுவோம். இதேவேளை, கல்வி மறுசீரமைப்பில் பாடசாலை நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக முஸ்லிம் பாடசாலைகள் திங்கள் முதல் வியாழன் வரையில் பிற்பகல் 2.50 வரையில் நீடிக்கப்படவுள்ளது. மாணவர்கள் பகல் உணவு தொடர்பான பிரச்சினைகளை எதிர்கொள்வர்.
பொருளாதாரச் சிக்கலில் பல குடும்பங்கள் இருக்கின்றன. இவ்வாறான நிலைமையில் நேர நீடிப்பை நீடித்தால் அவர்களுக்கு உணவு வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.

ஆசிரியர்கள் தொடர்பான பிரச்சினைகள்
இதேவேளை, கஷ்டப் பிரதேசத்தில் பணியாற்றும் ஆசிரியர்கள் தொடர்பான பிரச்சினைகள் குறித்து அரசு கவனம் செலுத்த வேண்டும். தீவுப் பகுதியொன்றை எடுத்துக்கொண்டால் போக்குவரத்துப் பிரச்சினை தொடர்பில் பார்க்க வேண்டும்.
வைத்தியசாலை, தபால் நிலையம் மற்றும் வங்கி இருப்பதால் அது கஷ்டப் பிரதேச பாடசாலை அல்ல என்று கூற முடியாது. இதனால் அங்கு 16 பாடசாலைகள் கஷ்டப் பிரதேச அந்தஸ்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இது எந்த வகையில் நியாயமானது என்று கேட்கின்றேன்.
இதேவேளை, கஷ்டப் பிரதேச பாடசாலைக்குச் செல்லும் ஆசிரியர்களுக்கு அதற்காக 1500 ரூபா கொடுப்பனவே வழங்கப்படுகின்றது.

இன்றைய பொருளாதாரத்தில் இது போதுமானதா? போக்குவரத்து மிகவும் மோசமானது. அவர்கள் அங்கேயே தங்க வேண்டியிருக்கும். மேலதிக செலவுகள் இருக்கும். அவர்களின் செலவுகளை எண்ணிப் பாருங்கள்.
இந்தத் தொகை இது கஷ்டப் பிரதேச ஆசியர்களுக்கு ஊக்கப்படுத்தாமல் ஊக்கமிழப்பையே செய்கின்றது. இதனால் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். நான் சிலரை ஆஸ்திரேலியாவில் இருந்து அழைத்து வந்துள்ளேன்.
ஆங்கில கல்வி தொடர்பில் அவர்கள் சில பரிந்துரைகளை முன்வைத்துள்ளனர். இது தொடர்பில் நீங்கள் அவதானம் செலுத்துவீர்கள் என்று எதிர்பார்க்கின்றேன் என்றார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |