ஹெய்ட்டி பணியாளர்கள் மீதான அத்துமீறல் குற்றச்சாட்டுகள் - ஐ.நா. அறிக்கையை மறுக்கும் கென்யா
ஹெய்ட்டி நாட்டில் ஆயுதம் ஏந்திய கும்பல்களின் வன்முறையை கட்டுப்படுத்த ஐ.நா பாதுகாப்பு பேரவையின் அனுமதியுடன் கென்யா தலைமையிலான பலநாட்டு பாதுகாப்புப் படை கடந்த 2024ஆம் ஆண்டு நிலைநிறுத்தப்பட்டது.
இந்த படையில் பணியாற்றிய அதிகாரிகள், நான்கு பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபட்டதாக ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் வெளியிட்ட அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
பாதிக்கப்பட்டவர்களின் விபரம்
இதில் பாதிக்கப்பட்டவர்களில் 12 மற்றும் 16 வயதுடைய மூன்று சிறுமிகளும் அடங்குவர் என அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

இருப்பினும், இந்த குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக மறுத்துள்ள கென்யா வெளியுறவு அமைச்சர் முசாலியா முதாவடி, இது தொடர்பாக ஐ.நாவிடம் முறையான எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் குற்றச்சாட்டுகளுக்கு எவ்வித ஆதாரமும் இல்லை என்றும், எந்த அதிகாரப்பூர்வப் புகாரும் பதிவு செய்யப்படவில்லை என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.
சர்வதேசப் படை பொறுப்பேற்று
நிதி மற்றும் செயல்பாட்டுச் சிக்கல்களுக்கு மத்தியிலும் ஹெய்ட்டியின் பாதுகாப்பிற்காக கென்யா அர்ப்பணிப்புடன் பணியாற்றிய நிலையில், இத்தகைய குற்றச்சாட்டுகள் ஏமாற்றமளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது கென்யா தலைமையிலான இந்தப் படைக்கு மாற்றாக, 'கேங் சப்ரஷன் ஃபோர்ஸ்' (Gang Suppression Force) என்ற பெரிய சர்வதேசப் படை அங்கு பொறுப்பேற்று வருவது குறிப்பிடத்தக்கது.