சுகாதார கழிவுகள் எரிக்கப்படுவதால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக குற்றச்சாட்டு
திருகோணமலை - மூதூர் தள வைத்தியசாலை சுகாதார கழிவுகள் அனைத்தும் வைத்தியசாலைக்குப் பின்புறமாக எரிக்கப்படுவதால் வைத்தியசாலையைச் சுற்றி இருப்போர் மிகவும் பாதிக்கப்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
இவ்விடயம் குறித்து மூதூர் தள வைத்தியசாலை நிர்வாகத்திற்குப் பல தடவைகள் தெரியப்படுத்தியும் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை குறிப்பிடுகின்றனர்.
மூதூர் தள வைத்தியசாலையில் தினமும் சுகாதார கழிவுகள் எரிக்கப்படுவதால் சுற்றுச் சூழலில் வாழும் நூற்றுக்கணக்கான மக்கள் கழிவுகளின் புகையைச் சுவாசிப்பதால் பல்வேறு விதமான நோய்கள் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இதேபோல் சிறுவர்களுக்குச் சுவாச நோய்கள் அதிக அளவில் ஏற்பட்டு வருவதாகவும், சுகாதார கழிவுகளை வேறு இடங்களுக்கு மாற்றி எரிக்குமாறும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மூதூர் - அக்கரைசேனை அப்துல் காசிம் வீதி மக்கள் மூதூர் பிரதேசத்திலுள்ள சுற்றாடல் உத்தியோகத்தருக்கும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் வைத்தியசாலைக் கழிவுகள் எரிப்பதால் ஏற்படும் விளைவுகள் தொடர்பான முறைப்பாடு என்ற தலைப்பிலான கடிதம் ஒன்றினையும் அனுப்பி வைத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆகவே மூதூர் தள வைத்தியசாலை நிர்வாகம் அப்பகுதியைச் சுற்றி இருக்கின்ற மக்களின்
நலன் கருதி சுகாதார கழிவுகளை வேறு இடங்களுக்கு எடுத்துச் சென்று எரிப்பதற்குரிய
நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
