கரைதுறைப்பற்று பிரதேச சபை அமர்வில் மறைக்கப்படும் இரகசியங்கள்! பிரதேச சபை உறுப்பினர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு
முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச சபை அமர்வில் இரகசியங்கள் மறைக்கப்படுவதனாலே ஊடகங்கள் அனுமதிக்கப்படவில்லை என கரைதுறைப்பற்று பிரதேச சபையின் முல்லை நகர வட்டாரத்தின் பிரதேச சபை உறுப்பினர் தொம்மப்பிள்ளை பவுள்ராஜ் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
ஊடகங்களுக்கான அனுமதி மறுப்பு
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,''ஜனநாயக நாட்டில் ஜனநாயக பண்பின் அடிப்படையில் நடைபெறும் சபை கூட்டத்தில் ஊடகங்களுக்கான அனுமதி மறுக்கப்பட்டமைக்கான காரணம் என்னவென்றால் 11.09.2025 அன்றையதினம் சுற்றுச்சூழல் பணியகத்தின் ஊடாக தவிசாளர், செயலாளருக்குரிய கூட்டம் சிகிரியாவில் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது.
குறித்த கூட்டத்திற்கு கரைதுறைப்பற்று பிரதேச சபையின் நிதியில் தவிசாளரான சின்னராசா லோகேஸ்வரன் பிரதேச சபை வாகனத்தை பயன்படுத்தி மாங்குளம் வரை சென்றுள்ளார். அதன்பின்னர் பணிக்கப்பட்ட இடத்திற்கு சென்றுள்ளார்.
மாகாண சபையினால் ஒதுக்கப்பட்ட நிதியின் ஊடாக கலந்துரையாடலுக்கு அழைக்கப்பட்டிருந்தார். ஆனால் தவிசாளர் அளவுக்குமீறிய போதையினால் குறித்த கூட்டத்திற்கு போகவில்லை. இதனால் பிரதேசசபை, மாகாணசபைக்குரிய நிதியானது வீணடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சம்பந்தபட்ட அதிகாரிகளிற்கு முறையிட இருக்கின்றேன்.''என கூறியுள்ளார்.



