முள்ளியவளையிலுள்ள பாடசாலையின் செயற்பாடுகள் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு
முல்லைத்தீவில் (Mullaitivu) முள்ளியவளை பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்படும் செயற்பாடானது பணத்தை வீணடிக்கும் முயற்சி என விமர்சிக்கப்பட்டுள்ளது.
குறித்த பாடசாலையின் முன்பக்க மதில்களுக்கு பூசப்பட்ட நிறப் பூச்சுக்கள் தொடர்பிலேயே ஆர்வலர்களால் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
செய்வன திருந்தச் செய் என மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்கும் பாடசாலை அதனை தான் கருத்தில் எடுத்து செயற்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மதில் சுவரின் நிறப் பூச்சுக்கள்
பிரதான வீதி மற்றும் பக்க வீதியினைப் பார்த்தவாறு இரு உள்நுழைவுப் பாதைகளை வித்தியாலயம் கொண்டுள்ளது.
பிரதான பாதையினை நோக்கியவாறு அமைந்துள்ள உள்நுழைவுப் பாதை பழைய பாதையாகும்.புதிய கட்டத் தொகுதியில் இயங்கும் முன்னர் இந்த பிரதான வீதியை பார்த்தவாறு உள்ள உள்நுழைவுப் பாதையே பிரதான பாதையாக இருந்து வந்துள்ளது என பாடசாலையின் கட்டமைப்பினை நினைவு கூர்ந்தார் முள்ளியவளையின் முதுசமொருவர்.
பிரதான வீதியினைப் பார்த்தவாறு உள்ள மதில் சுவர்களுக்கு பச்சை நிறப்பூச்சினை பூசி அழகுபடுத்தும் முயற்சி முன்னெடுக்கப்பட்டு இருந்தது.
நிறப் பூச்சுகள் பூசப்பட்டு சில நாட்களின் பின்னர் அவை உரிந்து கொட்டப்பட்டதால் சுவரின் தோற்றம் கவர்ச்சியற்றதாக மாறியுள்ளது. அழகுபடுத்த எடுத்த நிறப் பூச்சு பூசும் முயற்சி வீணாகிப் போய்விட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
எப்படி நிறப் பூச்சு பூச வேண்டும்
முன்னர் நிறப் பூச்சு பூசப்பட்டு இருந்த மதில் சுவருக்கு மீண்டும் நிறப்பூச்சினை பூச முற்படும் போது பல விடயங்களை கருத்தில் எடுக்க வேண்டும்.
பழைய நிறப்பூச்சினை அகற்றுவதற்காக மதில் நன்கு உரஞ்சப்பட்டு சுத்தம் செய்யப்படும். அதன் பின்னர் முதல் படை நிறப்பூச்சு பூசப்படும்.அதன் பின்னர் இரண்டாவது படை நிறப் பூச்சு இடப்படும்.அப்போது தான் நிறப்பூச்சு பூசப்பட்டதன் அழகுத் தோற்றம் பார்வைக்கு கவர்ச்சியானதாக இருக்கும்.இது குறைந்த செலவில் திட்டமிடும் போது பின்பற்றப்படும் முறையாகும்.
நேர்த்தியான நிறப் பூச்சுக்கு அதிகமான செலவு ஏற்படும்.எனினும் அது நிலைத்திருந்தது நீண்ட பயனினைத் தரக்கூடியதாகும்.இது சுவரில் உள்ள பள்ளங்களை நிரப்பி வெடிப்புக்கள் இருப்பின் அதனை அடைத்து அதன் பின்னரே முதல் படை நிறப் பூச்சு பூசப்படும்.பின்னர் விரும்பிய அல்லது பொருத்தப்பாடான நிறம் கொண்ட பூச்சு பூசப்படும் என நிறப்பூச்சுத் தொழிலில் ஈடுபட்டு வரும் தொழிலாளி குறிப்பிடுகின்றார்.
பாடசாலையின் மதில் சுவர்களுக்கு நிறப் பூச்சு இடும் போது பழைய நிறப்பூச்சினை அகற்றாது அதன் மீது புதிய நிறப்பூச்சினை பூசியதன் விளைவே இப்படி உரிந்து அலங்கோலமான காட்சி ஏற்படுவதற்கு காரணம் என அவர் மேலும் விளக்கியிருக்கிறார்.
சொல்வதைச் செய்யும் பழக்கம்
சொன்னபடி செய்து காட்டும் போது நேர்மையானவர்கள் என விழிக்கப்பட்டு அழைக்கப்படுவார்கள். மக்கள் நலனில் அக்கறை காட்டும் நிறுவனங்களில் பாடசாலைகளும் ஒன்றாகும்.அங்கு முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளை சரியான வழிமுறைகளில் முன்னெடுக்கப்பட வேண்டும்.
ஒரு சுவரின் நிறப் பூச்சினைக் கூட சரிவர பூசிக் கொள்ள முடியாத ஒரு பாடசாலை நிர்வாகமாக வித்தியாலயத்தின் நிர்வாகம் இருக்கின்றதா? என்ற கேள்வி தமக்கு எழுகின்றது.
முள்ளியவளையில் உள்ள முன்னணிப் பாடசாலைகளில் குறித்த வித்தியாலயமும் ஒன்றாக திகழ்ந்து வந்தது.ஆனாலும் இன்றும் அவ்வாறே இருக்கின்றதா என்ற கேள்வி எழுவதும் தவிர்க்க முடியாதது என சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
சீர் செய்திருக்க வேண்டும்
மதில் சுவருக்கு பூசப்பட்ட நிறப்பூச்சின் இன்றைய நிலை பல நாட்களாக இப்படியே தொடர்ந்தவாறு இருக்கின்றது. பாடசாலை சார்ந்த ஒருவரால் கூட இது தொடர்பில் கவனமெடுக்க முடியவில்லை என்பது அவர்களது பொறுப்புணர்சி தொடர்பில் சந்தேகிக்க வாய்ப்பேற்படுத்தி விடுகின்றது.
பிரதான வீதியின் வழியே பயணிப்போருக்கு இடையிடையே உரிந்து விரும்பத்தகாத காட்சித் தோற்றத்தினை ஏற்படுத்தியவாறு இந்த மதில் சுவர் தோற்றமளிப்பதாக இருக்கின்றது.
அந்த மதிலின் நிறப்பூச்சினை மீளவும் சீர் செய்து நேர்த்தியான காட்சித் தோற்றத்தினை ஏற்படுத்தியிருக்கலாம் என ஆர்வலர்கள் மேலும் குறிப்பிட்டிருந்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |