எந்தக் காலத்தில் குற்றம் இழைத்திருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்படுவர்: ஜனாதிபதி எச்சரிக்கை
எந்தக் காலத்தில் குற்றம் இழைத்திருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்படுவர் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற தேசிய பிக்குகள் தின நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
என்ன கோஷங்கள் எழுப்பப்பட்டாலும் எவ்வாறான தடைகள் வந்தாலும் முன்னெடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை வாபஸ் பெற்றுக் கொள்ளப்படாது என்பதை இந்த மகாநாயக்க தேரர்களின் முன்னிலையில் நான் சத்தியம் செய்து உறுதியளிக்கின்றேன் என தெரிவித்துள்ளார்.
நானும் எனது அரசாங்கமும் இந்த விடயத்தை செய்ய தவறினால் வரலாற்றில் எதிர்காலத்தில் எந்த ஒரு அரசாங்கமும் இதனை செய்யப்போவதில்லை என குறிப்பிட்டுள்ளார்.
முதலாவதாக இந்த நாட்டின் அனைவரும் சட்டத்தின் முன் சமனானவர்களாவார் எனவும் நீதி என்பது ஓர் பொதுவான எண்ணக்கரு, நாட்டின் அனைவரும் நீதியின் முன் சமமானவர்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
எனவே அவ்வாறான ஒரு கலாச்சாரத்தை நாம் உருவாக்குவோம் என குறிப்பிட்டுள்ளார்.
செல்வம், பணம், பதவிகள், கடந்த கால வரலாறு, அதிகாரத்தில் இருந்தமை போன்றவற்றை பொருட்படுத்தப் போவதில்லை எனவும் சட்டத்தின் முன் அனைவரும் சமமானவர்களே எனவும் தெரிவித்துள்ளார்.
எமது நாட்டில் எப்போதாவது ஒரு தினத்தில் குற்றச்செயலொன்றுடன் தொடர்பு பட்டிருந்தால் என்றாவது ஒரு நாள் ஊழல் மோசடியில் தொடர்புபட்டிருந்தால் எப்போதாவது ஒரு நாள் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டிருந்தால், எப்போதாவது ஒரு நாள் பொதுமக்களின் பணத்தை விரயமாக்கி இருந்தால் அவ்வாறான அனைவரையும் சட்டத்தின் முன் கொண்டு வருவதற்கு முடிந்த அளவு முயற்சி செய்வோம் என குறிப்பிட்டுள்ளார்.
இது பழிவாங்கலோ அல்லது வேட்டையாடுதலோ அல்ல இந்த சமூகத்தில் சட்டம் நீதி ஒழுங்கு என்பன தொடர்பில் மக்கள் மத்தியில் ஒரு நம்பிக்கையை கட்டி எழுப்ப வேண்டும் என தெரிவித்துள்ளார்.
சட்டம் அனைவருக்கும் சமமானது என்று கூறினால் சிலர் பதற்றமடைகின்றார்கள் இந்த நாட்களில் இதனை அவதானிக்க முடிகின்றது என தெரிவித்துள்ளார்.
பிரபுகளுக்கு சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் சாதாரண மக்களுக்கு எதிராக சட்டம் அமுல்படுத்தக் கூடாது என கூறுகின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறு பதற்றமடைவர்களது மனச்சாட்சிக்கு தெரியும் தாங்கள் குற்றவாளிகள் என்பது என தெரிவித்துள்ளார்.
குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்துவது சவால் மிக்கது என்றாலும் அதற்காக குரல் கொடுப்பதனை நிறுத்தப் போதில்லை எனவும் அந்த தைரியமும் விடா முயற்சியும் தமது தரப்பிற்கு உண்டு எனவும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.



