போதைப்பொருளற்ற யாழ்ப்பாணத்தை உருவாக்க அனைவரும் ஒன்றிணைவோம் – யாழ். அரசாங்க அதிபர்
போதைப்பொருளற்ற யாழ்ப்பாணத்தை உருவாக்குவதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார்.
புனர்வாழ்வு பணியகத்தின் ஏற்பாட்டில் நேற்றைய தினம்(21.07.2026) மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு செயலமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
புனர்வாழ்வு பணியகம்
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
புனர்வாழ்வு பணியகத்தின் செயற்பாடுகள் தலைமையகத்தின் வழிகாட்டலின் கீழ் முன்னெடுக்கப்பட்டாலும், மாவட்ட மட்டத்தில் அவை சிறப்பாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
குறிப்பாக, யாழ்ப்பாண மாவட்டத்தில் புனர்வாழ்வு பணிகள் சிறப்பாக முன்னெடுக்கப்படுவதற்கு புனர்வாழ்வு பணியகத்தின் பணிப்பாளர் நாயகம் பிரிகேடியர் எம்.எஸ்.அமித்துக்கு எனது நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும், இந்தச் செயலமர்வு போதைப்பொருளுக்கு அடிமையானவர்களை மீள்சமூகமயப்படுத்துதல், அவர்களை சரியான முறையில் வழிநடத்துதல் மற்றும் சமுதாயத்தை போதைப்பொருள் பாவனையிலிருந்து பாதுகாப்பது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பாடசாலை மாணவர்களை போதைப்பொருள் பாவனையிலிருந்து பாதுகாக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், விழிப்புணர்வு செயற்பாடுகள் மற்றும் சமூகத்தின் பங்களிப்பு குறித்து இந்தச் செயலமர்வில் விரிவாக கலந்துரையாடப்படவுள்ளது.
புனர்வாழ்வு நிலையங்களில் அனுமதிக்கப்படுபவர்கள் நீதிமன்ற உத்தரவின் பேரில் முதலில் சிறைச்சாலைகளுக்கு அனுப்பப்பட்டு, பின்னர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு மாற்றப்படுவதாகவும், புனர்வாழ்வில் உள்ளவர்களில் சுமார் 90 சதவீதம் பேர் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் என புள்ளிவிவரங்கள் காட்டுகிறது.
போதைப்பொருளற்ற சமூகம்
யாழ். மாவட்டத்தை போதைப்பொருளற்ற சமூகமாக மாற்றுவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். ஜனாதிபதியின் தலைமையில் முன்னெடுக்கப்படும் "அழகான வாழ்க்கை – போதைப்பொருளற்ற தேசம்" தேசிய வேலைத்திட்டம் யாழ்ப்பாண மாவட்டத்திலும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தத் திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுக்க இரண்டு முக்கிய அம்சங்கள் அவசியம். முதலாவதாக இளைய தலைமுறையினரை போதைப்பொருள் பாவனையிலிருந்து தடுக்கும் வகையில் தொடர்ச்சியான விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும்.

இரண்டாவதாக புனர்வாழ்வு நிலையங்களில் இருந்து சமூகத்திற்குத் திரும்பியவர்களை உரிய முறையில் ஆற்றுப்படுத்தி மீள்சமூகமயப்படுத்த வேண்டும்.
பாடசாலை மாணவர்களை நல்வழிப்படுத்தும் பொறுப்பு பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை சமூகத்தினருக்கு உள்ளது. பிரதேச செயலகங்களில் நியமிக்கப்பட்டுள்ள உத்தியோகத்தர்கள் போதைப்பொருள் தடுப்புடன் மட்டுமல்லாது, உளவள ஆலோசனை, ஆற்றுப்படுத்தல் மற்றும் புனர்வாழ்வு பெற்றவர்களை சமூகத்துடன் மீண்டும் இணைக்கும் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், புனர்வாழ்வு பெற்றவர்களை குறைந்தது இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து கண்காணித்து வழிநடத்த வேண்டிய அவசியம். இந்த நிகழ்வில் கலந்துகொண்ட அனைத்து உத்தியோகத்தர்களும் சமூகப் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டியவர்கள்.
போதைப்பொருள் பாவனை விகிதம்
பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், உளவளத்துணை உத்தியோகத்தர்கள் மற்றும் சமூக அமைப்புகள் இணைந்து செயற்பட்டால் ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்க முடியும். யாழ்ப்பாண மாவட்டத்தின் சில பகுதிகளில் போதைப்பொருள் பாவனையும் அதனுடன் தொடர்புடைய செயற்பாடுகளும் இன்னும் காணப்படுகிறது.
கிராம அபிவிருத்திச் சங்கங்கள், மாதர் கிராம அபிவிருத்திச் சங்கங்கள், மேம்பாட்டு குழுக்கள் உள்ளிட்ட சமூக மட்ட அமைப்புகளின் ஒத்துழைப்புடன் செயல்பட்டால் போதைப்பொருள் பாவனையை மேலும் கட்டுப்படுத்த முடியும்.

தற்போதைய புள்ளிவிவரங்களின் அடிப்படையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனை விகிதம் ஒப்பீட்டளவில் குறைவாக இருப்பதுடன், அந்த நிலையை மேலும் மேம்படுத்த அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.
இறுதியாக, புனர்வாழ்வு பணியகத்தின் பணிப்பாளர் நாயகம் பிரிகேடியர் எம். எஸ். அமித் பல்வேறு துறைகளைச் சேர்ந்த உத்தியோகத்தர்களை ஒருங்கிணைத்து இந்தச் செயலமர்வை ஏற்பாடு செய்தமைக்கு நன்றி.
போதைப்பொருளற்ற சமூகத்தை உருவாக்க அனைவரும் கைகோர்த்து செயல்பட வேண்டும். இந்தச் செயலமர்வில் பகிரப்பட்ட கருத்துகளை நடைமுறைப்படுத்துவதற்கு அனைத்து உத்தியோகத்தர்களும் அர்ப்பணிப்புடன் செயலாற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.