அனைத்து தமிழ்க் கட்சிகளும் ரணிலுடன் கூட்டு: டக்ளஸ் பகிரங்கம்
அனைத்து தமிழ்க் கட்சிகளும் ஏதோ ஒரு வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் கூட்டணியில் உள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் - நாவாந்துறை சென் மேரிஸ் விளையாட்டுக் கழக மைதானத்தில் நேற்று (15.09.2024) இடம்பெற்ற 'ரணிலால் இயலும்' பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ரணில் விக்ரமசிங்க தொடர்ந்தும் ஆட்சியில் இருந்தாலே வீழ்ச்சியில் இருந்து மீள முடியும். எதிர்வரும் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கதான் வெல்ல இருக்கின்றார். அந்த வெற்றியில் நாமும் பங்காளராக வேண்டும். தமிழ் மக்கள் மத்தியில் பல கட்சிகள் உள்ளன.
மக்கள் நலன்
அனைத்து தமிழ்க் கட்சிகளும் ஏதோவொரு வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் உறவை வைத்துள்ளன. எதிர்வரும் தேர்தலில் தமது ஆத்மார்த்த ஆதரவு அவருக்குத்தான் என அந்தக் கட்சியினர் ஜனாதிபதியிடம் கூறி வருகின்றனர்.
ஆனால், அவர்கள் வெளியில் வேறு முகத்தைக் காட்டுகின்றனர். குறித்த நபருக்குத்தான் ஆதரவளிக்க வேண்டும் என எவரும் ஈ.பி.டி.பி. கட்சிக்குப் பணிக்க முடியாது.
ஈ.பி.டி.பி. கட்சி என்ற வகையில் நாம் ஜனாதிபதியை ஆதரிக்க முடிவு செய்துள்ளோம். எப்போதும் மக்கள் நலன் சார்ந்த தனித்துவமான முடிவைத்தான் எமது கட்சி எடுத்து வந்துள்ளது. ஏனைய தமிழ்க் கட்சிகளுக்கு யார் பணிப்புரை வழங்குகிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.
அரசியல் உரிமை
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெல்வதன் ஊடாகவே நாட்டுக்கு ஒளிமயமான எதிர்காலத்தை வழங்க முடியும். தமிழ் பேசும் மக்களின் அரசியல் சார்ந்த, அபிவிருத்தி சார்ந்த பிரச்சினைகளாக இருந்தாலும் சரி, அவர்கள் எதிர்கொள்ளும் அன்றாடப் பிரச்சினைகளாக இருந்தாலும் சரி அவர் ஊடாகவே சாத்தியமாகும் என நம்புகின்றோம்.
காணிப் பிரச்சினையாக இருந்தாலும், அரசியல் உரிமையாக
இருந்தாலும் அவரால் தான் தீர்வு பெற்றுத்தர முடியும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |