கடலட்டை பண்ணைகள் அனைத்தும் விதிமுறைகளுக்கு அமைவாக ஒழுங்குபடுத்தப்பட வேண்டும்: டக்ளஸ்
வடமாகாணத்தில் அமைக்கப்பட்டுள்ள கடலட்டை பண்ணைகள் அனைத்தும் விதிமுறைகளுக்கு அமைவாக ஒழுங்குபடுத்தப்பட வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
கடற்றொழில் அமைச்சரின் யாழ். அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற விசேட கலந்துரையாடலிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
வேகமாக அதிகரித்து வருகின்ற கடலட்டைப் பண்ணைகளுக்குத் தேவையான கடலட்டை குஞ்சுகளைப் பெற்றுக் கொள்வதில் நடைமுறைச் சிக்கல்கள் ஏற்பட்டுள்ள நிலையில், நாட்டின் தற்போதைய நிலவரங்களையும், நாட்டிற்குத் தேவையான அவசர ஏற்றுமதி வருமானங்களையும் கருத்தில் கொண்டு, தற்காலிகமாகக் கடலிலிருந்து பெற்றுக்கொள்வதற்கு விதிமுறைகள் விரைவில் வெளியிடப்படும்.
அதனடிப்படையில் கடலட்டை குஞ்சுகளை உடனடியாகப் பெற்றுக் கொள்ளுகின்ற அதேவேளை, நீடித்து நிலைத்த கடலட்டை வளர்ப்பிற்குத் தேவையான கடலட்டை குஞ்சு பொரிக்கும் நிலையங்களை உடனடியாக விஸ்தரிக்க வேண்டும்'' என இதன்போது தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாணத்தினை சேர்ந்த மாவட்டங்களின் கடற்றொழில் திணைக்களம், நக்டா
எனப்படும் தேசிய நீரியல்வள அபிவிருத்தி அதிகார சபையின் ஆகியவற்றின்
அதிகாரிகளும் கடலட்டைப் பண்ணை செய்கையாளர்களும் கலந்து கொண்ட கலந்துரையாடலில், கடலட்டை பண்ணையாளர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும்
தீர்வுகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டன.