நீண்டகாலமாக சீர் இன்றி காணப்பட்ட தண்ணிமுறிப்பு வீதி: அமைச்சரின் வருகைக்காக கடுகதியில் சீரமைப்பு - ரவிகரன் சுட்டிக்காட்டு
நீண்டகாலமாக சீர் இன்றிக் காணப்பட்ட முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு வீதியினை சீர் செய்யுமாறு அப்பகுதி விவசாயிகள் பலமுறை கோரிக்கை விடுத்திருந்த நிலையிலும் அவ்வீதி சீர்செய்யப்பட்டிருக்கவில்லை.
இந்நிலையில் அண்மையில் அப்பகுதிக்கு இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க வருவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அமைச்சர் வருவதற்கு முதல் நாள் மிகவேகமாக வீதியின் சீரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்ததாக வடமாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
முல்லைத்தீவு - கரைதுறைப்பற்று பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், தண்ணிமுறிப்பு வீதி நீண்டகாலமாக குன்றுங்குழியுமாக சீரின்றிக் காணப்பட்டது. குறித்த வீதியினை சீரமைத்துத்தருமாறு, தண்ணிமுறிப்பு பகுதி விவசாயிகள் நீர்ப்பாசனத் திணைக்களத்திடம் பலதடவை கோரிக்கை விடுத்து வந்திருந்தனர்.
எனினும் அவ்வீதி சீரமைத்துக் கொடுக்கப்படாத நிலையே காணப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 18ஆம் திகதி இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க குருந்தூர் மலைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அமைச்சர் வருவதற்கு முதல்நாள் வீதி அபிவிருத்தி அதிகார சபை உடனடியாக குறித்த வீதியினை சீரமைத்ததாக அப்பகுதி விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
ஆகவே ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் அரசதரப்பு பிரதிநிதியாக இருப்பதால், முல்லைத்தீவு மாவட்டத்தில் சீர் இன்றிக் காணப்படுகின்ற வீதிகள் உள்ள இடங்களுக்கு அமைச்சர்களை அவ்வப்போது அழைத்து வந்தால் அவ்வீதிகளையும் சீரமைக்க முடியும்.
மேலும் அமைச்சர் வருகைதந்த போது அரச படைகள், பொலிஸார் குருந்தூர் மலைப்பகுதியில் குவிக்கப்பட்டு, இராணுவக் கொடிகள் பறக்கவிடப்பட்டிருந்தன. அதேவேளைத் தமிழ் மக்கள் மற்றும் ஆலய நிர்வாகத்தினர் அங்கு சென்று வழிபடுவதற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளதுடன், ஊடகவியலாளர்கள் அங்கு செல்லமுடியாமல் தடுக்கப்பட்டுள்ளார்கள்.
அங்கிருந்த தமிழர்களின் வழிபாட்டுச்சின்னங்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளன. அங்கிருந்த மரங்கள் பல வெட்டப்பட்டுள்ளன. அத்தோடு யாழ். பல்கலைக்கழக தொல்லியல் பீட மாணவர்கள், மற்றும் தொல்லியல் பீட விரிவுரையாளர்கள் எல்லோரையும் இணைத்து அங்கு ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே நீதிமன்றத்தின் கட்டளையாகும்.
இந்நிலையில் இந்த விடயங்கள் எல்லாம் மீறப்பட்டு அங்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை உங்கள் மனசாட்சியின்படி, ஒருங்கிணைப்பு தலைவரே நீங்கள் எப்படிப் பார்க்கின்றீர்கள்? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
ட்ரம்பின் போர் அச்சுறுத்தல் ஒரு பக்கம்... ரஷ்யாவுடன் ரகசிய ஒப்பந்தம் ஒன்றை முன்னெடுத்த ஈரான் News Lankasri
ஏய் யாருடி நீ, அறிவுக்கரசியை வெளியே துரத்திய கதிர்... பரபரப்பு எபிசோட், எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் Cineulagam