காணாமல் போனவர்கள் குறித்த உண்மையான எண்ணிக்கையுடனான புள்ளிவிபரங்கள் அரசாங்கத்திடம் - நீதியமைச்சர்
இலங்கையில் காணாமல் போனவர்கள் தொடர்பில் பலர் பொய்யான புள்ளிவிபரங்களை வெளியிட்டு நாட்டின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத் முனைவதாக நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
2009ஆம் ஆண்டு இறுதி யுத்தம் வரை, காணாமல் போனவர்கள் குறித்த உண்மையான எண்ணிக்கையுடனான புள்ளிவிபரங்கள் அரசாங்கத்திடம் காணப்படுகிறது, அதனை அடிப்படையாகக் கொண்டே நட்டஈட்டை வழங்குதல் மற்றும் மரணச்சான்றிதழ் வழங்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த நாட்டை அவமானப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் செயற்படும் ஒரு தரப்பினர் பொய்யான தகவல்களுடன் கருத்துக்களை வெளியிடுகின்றனர்.
20 ஆயிரம், 30 ஆயிரம் மக்கள் காணவில்லை என பொய்யான தகவல்களை வெளியிடுகின்றனர். எனினும் 2009ஆம் ஆண்டிலிருந்து உண்மையில் எத்தனைப் பேர் காணாமல் போனார்கள் என்ற தகவல்களை அரசாங்கம் கண்டறிந்துள்ளது.
ஆகவே அவ்வாறு உண்மையிலேயே காணாமல் போனவர்களுக்கு மரணச் சான்றிதழையும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈட்டையுட் வழங்க நாம் குறித்த அலுவலகத்தை ஊக்குவிக்கின்றோம்.
எமது அரசியல் யாப்பிற்கு அமைய கைதிகள் சித்திரவதைக்கு உள்ளாவதை தடுக்க வேண்டும். நீதவான் நீதிமன்ற நீதிபதிகள், மாதத்திற்கு ஒரு தடவையேனும் அவர்கள் பணியாற்றும் மாவட்ட எல்லைக்குள் அமைந்துள்ள சிறைச்சாலைககளுக்கு சென்று கைதிகள் மற்றும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் ஆராய வேண்டும்.
இதற்கமைய சட்டத்தில் திருத்தம் செய்யத் தீர்மானித்துள்ளோம். இலங்கையில் நல்லிணக்க செயன்முறை தடம் புரளவில்லை, அது பலப்படுத்தப்படுகிறது. காணாமல்போனோர் அலுவலகம், இழப்பீடு அலுவலகம் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகம் ஆகியவற்றின் நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.
மூன்று நிறுவனங்களும் தங்கள் சேவைகளைத் தொடர்வதை உறுதிசெய்ய அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளன. சில எதிர்பார்ப்புகளுக்கு மாறாக, தேசிய ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்ப குறித்த அலுவலகத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இழப்பீட்டு அலுவலகத்தின் முன்னைய அலுவலக பொறுப்பாளர்கள் தங்கள் பதவிக்காலம் முடியும் வரை செயற்பட அனுமதிக்கப்பட்டுள்ளனர். முன்னாள் தலைவர் பதவி விலகிய பின்னர் காணாமல் போனவர்கள் குறித்த அலுவலகத்திற்கு புதிய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கையின் நீதிமன்ற கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில் பல்வேறு செயற்றிட்டங்களை முன்னெடுக்க வேண்டியுள்ளது. இதற்கமைய வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்தும் வகையில் இந்த வருட இறுதிக்குள் இலங்கையின் அனைத்து நீதிமன்றங்களையும் தொழிநுட்ப ரீதியில் மேம்படுத்தி டிஜிடல் மயப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம்.
தாமதமாகும் நீதியை விரைவாக பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கவுள்ளோம். நீதிமன்ற கட்டடங்களையும் அதிகரிக்க எதிர்பார்த்துள்ளோம். இதன் மூலம் தகுதி தராதரம் பாராது நீதியைப் பெற்றுக்கொடுக்க எதிர்பார்க்கின்றோம் என சுட்டிக்காட்டியுள்ளார்.