மன்னாரில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றாது ஒன்று கூடிய மதுபிரியர்கள் - மக்கள் விசனம் தெரிவிப்பு
மன்னார் பகுதியில் அமைந்துள்ள மது விற்பனை நிலையத்தில் சுகாதார நடை முறைகளை கடைப்பிடிக்காது பலர் மதுபானப் பொருட்களைக் கொள்வனவு செய்ய முண்டியடித்துள்ள போதும் குறித்த பகுதியில் பொலிஸார் கடமையில் ஈடுபடவில்லை என விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை (13) மாலை இடம்பெற்றுள்ளது.
நேற்று வியாழக்கிழமை இரவு முதல் எதிர் வரும் மூன்று தினங்கள் நாடு முழுவதும் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், அணைத்து வர்த்தக நிலையங்களையும் மூடுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மதுபானசாலைகளை மாலை 6 மணியுடன் மூடுமாறும் அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்நிலையில், மூன்று தினங்கள் மதுபானசாலைகள் மூடப்படவுள்ளதால் நேற்று வியாழக்கிழமை மாலை மன்னாரில் உள்ள மதுபானசாலைகளுக்கு முன் அதிகளவிலான மது பிரியர்கள் கூடியிருந்தனர்.
மது விற்பனை நிலையம் அமைந்துள்ள பகுதியில் உள்ள வீதி முழுவதும் மோட்டார் சைக்கிள் உட்பட தமது வாகனங்களை நிறுத்தி விட்டு சுகாதார நடைமுறைகளைக் கருத்தில் கொள்ளாது மது பிரியர்கள் மதுபான பொருட்களைக் கொள்வனவு செய்ய முந்தியடித்தனர்.
மதுபானசாலைகளுக்கு முன் பிரதான வீதியில் மது பிரியர்கள் நீண்ட வரிசையில் காணப்பட்டதுடன், மாலை 6 மணிக்கு மதுபானசாலைகளை மூட முடியாத அளவிற்கு மக்கள் கூட்டம் காணப்பட்டது.
மது பிரியர்கள் எதிர்வரும் 3 தினங்களுக்குத் தேவையான மதுபான பொருட்களைக் கொள்வனவு செய்து சென்றுள்ளனர்.
சுகாதார நடை முறைகளை மீறி அதிகளவிலான கூட்டம் காணப்பட்டிருந்த நிலையில் பொலிஸார் குறித்த பகுதிக்கு வரவில்லை எனவும், மாலை 6 மணிக்குப் பின்பே குறித்த பகுதிக்கு வந்ததாகவும் தெரிய வருகின்றது.
இதனால் குறித்த பகுதியில் நீண்ட நேரம் சுகாதார நடை முறைகள் பின்
பற்றப்படவில்லை எனப் பிரதேச மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.





