அளம்பில் திலீபன் வைத்தியசாலை அன்றும் இன்றும் (Photos)
வடக்கு கிழக்கு முழுவதும் திலீபன் வைத்தியசாலை சிறப்பாக செயற்பட்டு பொது மக்களுக்கு சிறந்த மருத்துவ சேவையினை வழங்கி வந்தமை அனைவரும் அறிந்ததே.
போராட்ட அமைப்பொன்றின் இத்தகைய முயற்சி வரவேற்கப்பட்ட ஒன்றாகவே அன்று இருந்தது.
இவ்வாறு தோன்றியதே அளம்பில் திலீபன் வைத்தியசாலை.
திலீபன் மருத்துவ சேவை
தமிழீழ விடுதலைப் புலிகளின் மருத்துவப் பிரிவினால் வடக்கு கிழக்கு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ சேவைப்பிரிவே திலீபன் வைத்திசாலைகள் ஆகும்.
மருத்துவத்தினை இரு பெரும் பிரிவுகளாக தமிழீழ விடுதலைப் புலிகள் அப்போதைய காலப்பகுதியில் பிரிந்திருந்தனர்.
ஒன்று பொதுமக்களுக்கான மருத்துவ சேவையை வழங்கும் பிரிவு. இரண்டாவது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கான மருத்துவ சேவை வழங்கும் பிரிவு.
இதன்போது மருத்துவ வசதியில்லாத இடங்களில் திலீபன் மருத்துவ சேவையை அவர்கள் வழங்கி வந்திருந்தனர்.
நடமாடும் சேவை,முதலுதவிப் பயிற்சி வகுப்பு என்பவற்றோடு மருத்துவமனைகளையும் அமைத்து சேவைகளை வழங்கினார்கள்.
திலீபன் மருத்துவமனைக்கான மருந்துகள் தமிழீழ சுகாதார பிரிவினாலும் மருத்துவர்களை தமிழீழ விடுதலைப் புலிகளின் மருத்துவப் பிரிவினாலும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது என திலீபன் மருத்துவமனையில் இணைப்பாளராக கடமையாற்றிய பணியாளரொருவருடனான உரையாடலின் மூலம் அறிய முடிந்தது.
முல்லைத்தீவு - திருகோணமலை பிரதான வீதியில்(B297) முல்லைத்தீவில் இருந்து 10km தூரத்தில் அளம்பில் அமைந்திருந்தது.
அளம்பில் திலீபன் மருத்துவமனை
2009 ஆம் ஆண்டிற்கு முன்னர் சிறப்பாக இயங்கிய இந்த மருத்துவமனை அதன் பின்னர் செயலிழந்து போயுள்ளது.
மீள் குடியேற்றத்தின் பின்னர் இந்த திலீபன் மருத்துவமனையின் சேவையைப் போன்ற இலங்கை அரசின் "பிராந்திய மருத்துவமனை அளம்பில்" என்பது செம்மலை அளம்பில் கிராமங்களில் எல்லையில் அமைக்கப்பட்டது.
திலீபன் மருத்துவமனையில் இருந்து 2km தூரம் திருகோணமலை நோக்கியதாக அதன் அமைவிடம் காணப்பட்டது. கொக்குத்தொடுவாய்,கொக்கிளாய், கருநாட்டுக்கேணி,புளியமுனை,நாயாறு,செம்மலை, அளம்பில்,உடுப்புக்குளம் போன்ற அதிகமான கிராமங்களைச் சேர்ந்த மக்களின் பயன்பாட்டுக்கு இது உதவியாக அமைகின்றமையை அவதானிக்க முடிந்தது.
முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு செல்லும் கிளினிக் நோயாளர்களுக்கான கிளினிக் வசதிகளை இப்போது அளம்பில் பிராந்திய வைத்தியசாலை வழங்குவதாக இந்த கிராமங்களைச் சேர்ந்த கிளினிக் நோயாளர்கள் குறிப்பிட்டனர்.
இன்று இலங்கை அரசினால் வழங்கப்படும் மருத்துவ சேவையினை அன்று தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு வழங்கியது என்பது வியப்புக்குரியது என்று இந்த விடயத்தினை எங்கள் தேடலின் போது எம்மிடமிருந்து அறிந்து கொண்ட வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் குழுவொன்றைச் சேர்ந்தவர்கள் கருத்திட்டிருந்தமையும் நோக்கத்தக்கது.
இன்று அளம்பில் திலீபன் மருத்துவமனை கட்டிடம்
தனிநபரொருவரின் நிலத்தில் கட்டப்பட்டிருந்த திலீபன் மருத்துவமனை கட்டிடம் இன்று பயன்பாடற்று இடிந்து போயுள்ளமை வருத்தமளிப்பதாக அதனை சுற்றியுள்ள மக்கள் பலர் தங்கள் ஆதங்கத்தினை வெளியிட்டனர்.
யுத்தத்தினால் சேதமடையாதிருந்த இந்த கட்டிடம் அதன் பின் பராமரிப்பில்லாது இப்படி இடிந்துபோயுள்ளது என்று கடைவியாபாரி ஒருவர் குறிப்பிட்டார் .
காணி உரிமையாளர் இந்த ஊரினைச் சேர்ந்த ஒருவரிடம் காணியை பராமரிக்க வழங்கியிருக்கின்றார். பொதுத் தேவைகளுக்காக அந்த இரு கட்டிடங்களையும் பயன்படுத்தியிருக்கலாம்.
ஆனாலும் அதற்குத் தராது வீணாக்குகின்றனர் என்று அவ்வூரின் முதியவர்கள் சிலர் கருத்துரைத்தனர்.
நில பராமரிப்பாளரின் கருத்து
இரு கட்டிடங்கள் உள்ளன. ஒன்று மருத்துவமனையாகவும் மற்றைய கட்டிடம் வைத்தியர் தங்கியிருப்பதற்காகவும் பயன்பட்டதாக தற்போது காணியை பராமரித்து வரும் அவ்வூர் மனிதர் குறிப்பிட்டார்.
காணி 15 ஏக்கர் பரப்பளவைக் கொண்டது. பிரதான வீதியோரமாகவுள்ள ஒரு ஏக்கர் நிலத்தினை காணியாளர் தம் தேவைக்காக பயன்படுத்த விரும்புகின்றார்.
இப்போது இரு சகோதரங்கள் இந்த நிலத்தினை பங்கிட்டுக்கொண்டுள்ளனர். அதற்குள்ளே தான் இந்த கட்டிடங்கள் வருகின்றன.
அதனால் அதனை பொதுத்தேவைக்கென கொடுப்பது சாத்தியமில்லை என மேலும் குறிப்பிட்டார்.
“தற்காலிகமாக வழங்கியிருக்கலாமல்லவா?” என்ற கேள்விக்கு அவரது பதில் ஆச்சரியமளித்தது. அப்படி வழங்க முடியும்.
ஆனாலும் அதனை இந்த ஊரின் எந்த பொது அமைப்புக்களும் வந்து தம்மிடம் கேட்கவில்லை என்றும் காணியாளர்கள் பிரதான வீதியிலிருந்து ஒரு ஏக்கர் தவிர்த்து பின்னுள்ள நிலத்தில் பொதுத்தேவைக்கென சிறியளவு நிலத்தினை நன்கொடை செய்ய உடன்படுவார்கள்.
ஆனால் யாரும் வந்து கேட்காவிட்டால் அது எப்படி சாத்தியமாகும் என்று குறிப்பிடுகின்றார்.
பொறுப்பற்ற செயற்பாடுகள்
அளம்பில் கிராமம் முல்லைத்தீவு மாவட்டத்தில் பழைமையான கிராமங்களில் ஒன்றாகும்.
புராதாணமான ஆலயமாக அந்தோனியார் கிறிஸ்தவ ஆலயமும், முருகன் ஆலயமும், மாதா ஆலயமும் இருப்பதனை சுட்டிக்காட்டல் வேண்டும்.
இத்தகைய சூழலில் பொதுத்தேவைக்கென போதியளவு நிலம் இல்லாத நிலை இருப்பதும் அவதானிக்க முடிகின்றது.
இருப்பினும் பொது அமைப்புகள் இது தொடர்பில் அக்கறை காட்டவில்லை என்பது மக்கள் பலரின் கருத்தாக அமைந்துள்ளது.
பெருந்தோட்டங்களை அதிகளவில் கொண்ட
இந்த கிராமத்தில் பொதுத் தேவைக்காக நிலங்கள் நன்கொடையாக்கும் போது அதனை சரியான
முறையில் பெற்று கிராமத்திற்கான தேவைகளுக்கு பயன்படுத்தலே பொருத்தமானது என
அந்த கிராம பாடசாலை ஆசிரியர் ஒருவர் விளக்கியுள்ளார்.
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Uky(ஊகி) அவரால் எழுதப்பட்டு, 26 October, 2023 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.