அக்குரணையில் கோர விபத்து! சாரதிக்கு அடுத்தகட்டப் பரிசோதனை - பொலிஸார் வெளியிட்ட தகவல்
கண்டி - மாத்தளை பிரதான வீதியின் அக்குரணை, குருகொட சந்திக்கு அருகில் இடம்பெற்ற கொடூர விபத்து குறித்து மேலதிக விபரங்களை வீதிப் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் (DIG) டபிள்யூ.பி.ஜே.சேனாதீர வெளியிட்டுள்ளார்.
அலவத்துகொட பகுதியிலிருந்து கண்டி நோக்கிச் சென்ற சீமெந்து ஏற்றிய லொரி வளைவொன்றில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, முதலில் ஒரு மோட்டார் சைக்கிளை சுமார் 160 மீற்றர் தூரம் இழுத்துச் சென்றுள்ளது.
பொலிஸார் தீவிர விசாரணை
பின்னர் 4 முச்சக்கர வண்டிகள் மற்றும் மேலும் இரு வாகனங்களுடன் மோதி விபத்துக்குள்ளானது. லொறியின் பிரேக் செயலிழந்ததாலேயே வாகனத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போனதாகச் சாரதி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

சாரதியிடம் நடத்தப்பட்ட மதுபானப் பரிசோதனையில் அவர் மது அருந்தவில்லை (Negative) என உறுதி செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும், அவர் போதைப்பொருள் உட்கொண்டிருந்தாரா என்பதைக் கண்டறிய மேலதிக பரிசோதனைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பகுப்பாய்வாளரின் அறிக்கை
சாரதி தூங்கியதால் விபத்து நேரிட்டதா என்பது குறித்தும், மோட்டார் வாகன பரிசோதகர் மற்றும் அரச பகுப்பாய்வாளரின் அறிக்கைகளைப் பெற்று இயந்திரக் கோளாறுகள் ஏதும் இருந்ததா என்பது குறித்தும் ஆராயப்பட்டு வருகிறது.
பயணத்தைத் தொடங்குவதற்கு முன்னர் தடையாளி , விளக்குகள் உள்ளிட்ட அத்தியாவசிய பாகங்களைச் சரிபார்ப்பது சாரதியின் சட்டபூர்வப் பொறுப்பாகும் என பிரதிப்பொலிஸ் மா அதிபர் (DIG) வலியுறுத்தினார்.

மேலும், வாகனங்களுக்கு 3 மாதங்களுக்கு ஒருமுறை அல்லது 5,000 கி.மீ ஓட்டத்திற்குப் பிறகு கட்டாயப் தகுதிச் சான்றிதழ் (Fitness Certificate) பெறும் புதிய விதிமுறையைக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளனர். சாரதியை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.